பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவது குறித்த நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள நிலையில், அந்நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தால் அணு ஆயுதங்களை அனுப்ப நேரிடும் என வெளிப்படையாகவே எச்சரித்துள்ளது ரஷ்யா.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ஸ்வீடன் பிரதமரான Magdalena Andersson, விரைவாக நேட்டோ அமைப்பில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்.
ஜூன் மாதம் 29 வாக்கில் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்லாந்தும் தனது விண்ணப்ப நடவடிக்கைகளை சில வாரங்களுக்குள் துவங்க திட்டமிட்டுள்ளதாக பின்லாந்து பிரதமரான Sanna Marin தெரிவித்துள்ளார்.
பின்லாந்தும் ஸ்வீடனும், ரஷ்யாவைக் கோபப்படுத்தக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு காலமாக நேட்டோ அமைப்பில் இணைவதைத் தவிர்த்து வந்தன.
ஆனால், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து அந்நாடுகளின் மக்களுடைய எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளன.
ஆனால், பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணையத் திட்டமிட்டுள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பால்டிக் கடல் பகுதிக்கு அணு ஆயுதங்களை அனுப்ப இருப்பதாக ரஷ்யா நேட்டோ அமைப்பை எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.