அத்தையிடம் திருடிய அரையணா! – அம்பேத்கரின் வாழ்வை மாற்றிய நிகழ்வுகள் #EqualityDay

நான்கு வர்ணங்களில் இடம் பெறாமல் ஜாதியற்றவர்களாக இருந்த மக்களைத் தீண்டப்படாதவர்கள் ஆக்கியது இந்திய வரலாறு. இந்த வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் யாவரும் வீட்டு விலங்குகளை வளர்க்கவோ, உலோக அணிகலன்களை அணியவோ, விருப்பமான உடைகளை உடுத்தவோ, பிடித்த உணவுகளை உண்ணவோ முடியாது. பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தவும், கல்விச் சாலைகளில் படிக்கவும், கோயில்கள், பொதுவீதிகளில் செல்லவும் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேற்படி மக்களில் ஒருவராக 1891 ஏப்ரல் 14ல் பிறந்தவர் தான் பாபாசாகேப் அம்பேத்கர்.

பட்டியலின மக்களாக இருந்த காரணத்தால் தன் வகுப்பினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்த ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ராம்ஜி மாலோஜி சக்பால் என்பவர் தான் அம்பேத்கரின் தந்தையாவார். தந்தையாரின் போராட்டக் குணம் அம்பேத்கரின் இரத்தத்துடன் இதயத்திலும் ஆழமாகப் பதிந்திருந்தது.

அம்பேத்கர்

தீண்டாமையும் பொருளாதார நெருக்கடியும் கொடுமைகளாக இருந்த அந்தக் காலக் கட்டத்தில் அம்பேத்கரை மிக உயர்ந்த கல்வியாளராக மாற்றுவதற்கு அவரின் தந்தை மிகக் கடுமையாக உழைத்தார். தனது நகைகளை விற்றும் அடகு வைத்தும் புத்தகங்களை வாங்கித் தந்தார். மகனை விரைவில் தூங்க வைத்துவிட்டு இரவு இரண்டு மணி வரை விழித்திருந்து அவரை விடியற்காலைக்கு முன்பாக எழுப்பிப் படிக்க வைப்பார். பிள்ளைக்கு மெத்தை வாங்கிக் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் வெறும் தரையில் படுப்பார். கால்பந்து விளையாடவும் கிரிக்கெட் விளையாடவும் கற்றுக் கொடுத்தார்.

தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட விளையாட்டுப் பயிற்சியிலிருந்து வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனத்திடத்தை அம்பேத்கர் பெற்றார். துன்பங்களுக்குப் பயப்படாமல் செயல்படும் திறன், எடுத்தச் செயலை முடிக்கும் விடா முயற்சி, சமூகத்தின் நலன் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடு ஆகிய மூன்று நற்பண்புகளையும் தந்தையாரிடமிருந்து அம்பேத்கர் கற்றுக் கொண்டார். மது அருந்தாமை, புகை பிடிக்காமை போன்ற நல்லொழுக்கங்களையும் தந்தையாரிடமிருந்தே அம்பேத்கர் கற்றுக் கொண்டார்.

தாயார் பீமாபாயைச் சிறுவயதிலேயே இழந்துவிட்ட போதிலும் அவர் அடிக்கடிச் சொல்லித் தந்த “சுயமரியாதையை எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தகாலில் நிற்க வேண்டும்”, என்ற அறிவுரையை வாழ்நாளின் இறுதிநாள் வரையிலும் அம்பேத்கர் பின்பற்றி வந்தார்.

அரசியல் மேதை அம்பேத்கர் #Classics

வேற்றுசாதி மாணவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் மர இருக்கைகளில் அமர்வார்கள். ஆனால் அம்பேத்கரும் அவரின் அண்ணனும் பள்ளிக்குச் செல்லும் போது கோணிப்பைகளைத் தனியாகக் கொண்டு செல்வர். தீண்டாமை காரணமாக மற்ற மாணவர்களுடன் சமமாக உட்காரும் உரிமை தீண்டப்படாத வகுப்பினருக்கு மறுக்கப்பட்டிருந்தது.

நன்றாகப் படிக்கிறார் என்பதற்காகக் கரும்பலகையில் எழுத வருமாறு ஆசிரியர் ஒருவர் அம்பேத்கரை அழைத்தபோது, மற்ற மாணவர்கள் கூக்குரல் இட்டுச் சத்தம் போட்டனர். தங்களின் உணவுப் பைகள் தீட்டாகிவிடும் என்று கருதிய அவர்கள், தங்களது உணவுப் பைகளைத் தூக்கிக் கொண்டனர். அம்பேத்கர் அவமானத்தால் கரும்பலகையில் எழுத முடியாமல் திரும்ப வேண்டியிருந்தது.

கத்திக்கும் தீட்டாகிவிடும் என்று கருதி நாவிதர்கள் அம்பேத்கருக்கு முடி வெட்ட மறுக்கவே, அம்பேத்கரின் சகோதரியே நாவிதராக மாறினார்.

பள்ளியில் படிக்கும் போது நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளால் அம்பேத்கர் மனம் உடைந்தார். பள்ளிக்குச் செல்லத் தயங்கினார். விளையாட்டிலும் தோட்ட வேலைகளிலும் ஆர்வம் காட்டினார். தொடர்வண்டி நிலையத்தில் துப்புரவு, கழுவுதல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டார். தனக்குக் கிடைக்கும் காசைக் கொண்டு செடி வாங்கி நடுவதில் ஈடுபாட்டுடன் இருந்தார். தந்தையாருடன் கருத்து வேறுபாடு கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி பம்பாய்க்குச் சென்று வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். இதற்காகத் தேவைப்படும் பயணச் செலவிற்காக தனது அத்தையின் பணப்பையைத் திருடத் திட்டமிட்டார். 3 நாட்கள் திருட முயற்சி செய்து முடியாமல் நான்காம் நாள் அந்தப் பையத் திருடிவிட்டார். அந்தப் பையைத் திறந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்தப் பையில் இருந்தது வெறும் அரையணா மட்டுமே.

அம்பேத்கர்

இது குறித்து பின்னாளில் அம்பேத்கர் குறிப்பிடும்போது, “நான்கு இரவுகளும் நான் திருடும் முயற்சியில் ஈடுபட்டபோது என் உடல் பயத்தால் நடுங்கியது. எனவே வெட்கக் கேடான அந்தத் தன்மையில் இனி பணத்தைச் சேர்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன். வேறொரு நேர்மறையான முடிவுக்கு வந்தேன். இந்த முடிவு தான் என் வாழ்நாளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்குச் செல்லாமல் பொழுதுபோக்கித் திரிகின்ற செயலைக் கைவிட்டுவிட்டு இனி கடுமையாக உழைத்துப் படித்துத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் சுயமாகச் சம்பாதித்தத் தந்தையின் சார்பு இல்லாமல் வாழ முடியும் என்று முடிவு செய்தேன்.”

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அம்பேத்கரின் கல்வி வரலாறு தொடங்கியது. வீட்டில் படுக்கக் கூட வசதி இல்லாதபோதும் ஆட்டுக்குட்டிக்கும் தானிய மூட்டைக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டு படிப்பார். கண்ணாடி இல்லாத காலத்தில் மண்ணெண்ணயின் அசைந்தாடும் ஒளியில் இரவு பகல் பாராது கண்விழத்துப் படித்தார்.

தந்தையைப் பார்க்க மாட்டு வண்டியில் பயணம் செய்ய வேண்டிய சூழலில் இவரையும் இவர் அண்ணனையும் வண்டியில் ஏற்ற வண்டிக்காரன் மறுத்துவிட்டான். தீண்டப்படாதவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவர்களுக்காக மாட்டு வண்டி ஓட்டுநர் வேலையைச் செய்யக் கூட அவருக்கு மனமில்லாத சூழலில் அண்ணன் தம்பி இருவருமே அந்த வண்டியை ஓட்டிச் செல்ல அனுமதி கேட்டனர். இவர்களிடம் வண்டியைக் கொடுத்த வண்டிக்காரன் தான் பின்னாலேயே நடந்து வந்தான். மாட்டு வண்டியை ஓட்டத் தெரியாத அம்பேத்கரும் அவர் அண்ணனும் வழியில் வண்டி கவிழ்ந்து குப்புற விழுந்தனர். அந்த அவமானத்தைத் தன்மானமாக கருதிய அம்பேத்கர் இவ்வாறான சூழலை இனிவரும் காலங்களில் எவரும் சந்திக்கக் கூடாது என்பதற்கான உறுதிமொழியை மனதில் எடுத்துக் கொண்டார்.

அம்பேத்கர்

தீண்டப்படாதவர்களின் துன்பங்கள் தீர வேண்டுமானால் கல்வி மட்டுமே அதற்கான ஆயுதமாக இருக்கும் என்பதை உணர்ந்த அம்பேத்கர் பல்வேறு கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து கல்வி கற்றார்.

நடுப்பள்ளி வரை அரசுப்பள்ளியில் பயின்ற அம்பேத்கர் தனது உயர்நிலைக் கல்வியை இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக கருதப்பட்ட எல்பின்ஸ்டன் பள்ளியில் பயின்றார். பட்டியலின வகுப்பினர் யாரும் சாதிக்காத அளவிற்கு மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதன் காரணமாக கெலுஸ்கர் என்பவர் அம்பேத்கரைப் பாராட்டிக் கௌதம புத்தரின் வரலாறு என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். இந்தப் புத்தகம் தான் பின்னாளில் அம்பேத்கர் புத்தமதம் சேர்வதற்குக் காரணமாக அமைந்தது.

1908ல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பட்டப்படிப்பிற்காகச் சேர்ந்தார். இதற்காகப் பரோடா மன்னர் கெய்க்வாட் அவர்களைச் சந்தித்து உதவி கேட்டார். தீண்டப்படாதவர்கள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டிய பரோடா மன்னர் 25 ரூபாயை கல்விக்கடனாக அளித்தார். இதனால் பி.ஏ, பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை அளித்த பரோடா மன்னர் முன்வந்ததால் அம்பேத்கர் கொலம்பியா சென்று எம்.ஏ,படித்துப் பட்டம் பெற்றார். முதன்மைப் பாடமாகப் பொருளாதாரத்தையும் துணைப் பாடங்களாகச் சமூகவியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், அரசியல் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தார்.

அம்பேத்கர்

கொலம்பியாவில் பிஎச்டி படிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் பரோடா மன்னரின் கடன் உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவிலிருந்து திரும்ப நேர்ந்தது. பம்பாய் சைடன்ஹாம் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். தனது வாழ்க்கைக்குத் தேவையான ஊதியம் அங்கு அவருக்குக் கிடைக்கப் பெற்றது. ஆனால் சமுதாய முன்னேற்றத்திற்குத் தனது கல்வியறிவு மேலும் தேவை என்று நினைத்த அம்பேத்கர் தனது பணியைத் துறந்துவிட்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார். அங்குப் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலுக்கான கல்வி நிறுவனத்திலும், கிரேஸ் இன் சட்டக்கல்லூரியிலும் சேர்ந்தார். கல்வியின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

அம்பேத்கரின் ரூபாயின் சிக்கல் என்ற ஆய்வுக் கட்டுரைக்காக லண்டன் பல்கலைக்கழகம் அவருக்கு ‘Doctor of Science’ என்ற உயர்பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

உயர்கல்வியைப் படித்து முடித்துப் பரோடா அரசில் இராணுவச் செயலாளராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டபோதும், அவ்வலுவலகத்தில் வேலை செய்பவர்களும் ஏவலர்களும் தொழுநோயாளியைப் போல் அம்பேத்கரை நடத்தினர். அங்குப் பணியாற்றிய வேலையாட்கள் படிப்பற்றவர்களாகவும் ஏழைகளாவும் இருப்பினும் கூட, அவ்வலுவலகக் கோப்புகளையும், தாள்களையும் அம்பேத்கரிடம் நேரில் தராமல் மேசையின் மீது வீசி எறிந்தார்கள். அவர் புறப்பட எழுந்ததும் அவர் போகும் நடைபாதையில் கிடந்த பாயைச் சுருட்டினர். அவருடைய அலுவலகத்தில் குடிநீர் கூட வைக்கப்படுவதில்லை.

தங்குமிடத்தைக் கூட யாரும் வழங்க முன்வராததால் ஒரு பார்சி விடுதியில் கூடுதல் கட்டணம் செலுத்தித் தங்கினார். ஆனாலும் கூட திடீரென ஒரு நாள் ஆயுதங்களுடன் மிரட்டி அவரை விடுதியை விட்டே துரத்திவிட்டனர். இதனால் தனக்குக் கிடைத்த அரசாங்கப் பணியையும் அம்பேத்கர் இழக்க நேரிட்டது. ஆடுமாடுகளை விட கேவலமாகத் தம் மக்கள் நடத்தப்படுவதை அம்பேத்கர் உணர்ந்தார்.

அம்பேத்கர்

தனது மனைவி குழந்தைகள் யாவரும் இந்தியாவில் உணவிற்காகவும் மருத்துவத்திற்காகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சூழலிலும் அவர் தனது கல்வி மேம்பாட்டிலேயே அதிக கவனம் செலுத்தினார். பிள்ளைகள் நோய்வாய் பட்டு மருத்துவச் செலவிற்குப் பணம் இல்லாச் சூழலிலும் அம்பேத்கரின் துணைவியார் ரமாபாய், பல்வேறு வீடுகளில் பாத்திரம் கழுவிச் சம்பாதிக்கும் பணத்தை அம்பேத்கரின் படிப்புச் செலவிற்கு அனுப்பி வைத்தார். கணவரின் கல்விச் செலவிற்கு உதவிய அந்த அம்மையார் தனது பிள்ளைகளையும் தன்னையும் சரியாகக் கவனித்துக் கொள்ளாததால் விரைவில் உயிரிழக்க நேர்ந்தது. இந்த அம்மையாரின் தியாகம் தான் அம்பேத்கர் என்ற மாபெரும் தலைவனை இந்தியாவிற்கு வழங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.

பி.கு : அண்ணல் அம்பேத்கர் அவர்கள் Untouchables தீண்டப்படாதவர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். நான்கு வர்ணத்தில் இல்லாதவர்களைத் தீண்டப்படாதவர்களாக்கினர் என்பதை அது குறிக்கும். தீண்டப்படாதவர்கள், தலித், ஹரிஜன், ஒடுக்கப்பட்டோர் ஆகிய வார்த்தைகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பயன்படுத்தக் கூடாது என்றார். ஏனெனில் பிரதிநிதித்துவத்திற்கான இடஒதுக்கீட்டிற்காக மட்டுமே Scheduled caste, Scheduled Tribes, Backward class போன்ற வார்த்தைகள் இருக்கலாம். அவை யாரையும் அடையாளப்படுத்தப் பயன்படுத்தக் கூடாது. எதிர்காலத்தில் ஜாதிகள் ஒழிந்து அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படும்போது இந்த அட்டவணைப்படுத்தப்பட்ட காகித ஆவனங்கள் (பட்டியல் வகுப்பு, இதர பிற்படுத்தப்பட்டோர்) போன்ற பெயர்கள் காணாமல் போக வேண்டும் என்பதே அவரின் விருப்பமாகும். எனவே தாழ்த்ப்பட்டோர் என்ற வார்த்தையைத் தவிர்த்து என் கட்டுரையில் தீண்டப்படாதவர்ள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். பொதுவாக எஸ்சி எஸ்டி என்ற சொல்லுக்குப் பட்டியல் வகுப்பு பழங்குடியினர் என்ற வார்த்தையே சரியானதாக இருக்கும் என்று நாங்கள் அறிகிறோம்.

சி.செந்தமிழ் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.