சென்னை: நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், விசிக தலைவர் திருமாவளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
ஓபிஎஸ் : சென்னை ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வைகோ மரியாதை: சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.