புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தது.
ஆம்ஆத்மி தற்போது டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுமாறு பா.ஜனதா எம்.பி.க்களை பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பணவீக்கம், வேலையின்மை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க சமூக வலைதளங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுமாறு மத்திய மந்திரிகள் உள்பட பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஆம்ஆத்மி அச்சுறுத்தலை பா.ஜனதா தலைவர்கள் சிலர் கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ஒடிசா, உத்தரபிரதேசம், அரியானா மாநில பா.ஜனதா எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.