தமிழ்நாடு சட்டமன்ற மாண்பையும், மக்களையும் மதிக்காததால் அவர் நடத்தும் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணிக்க உள்ளதாக தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு பேட்டி அளித்தனர்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்ப வலியுறுத்தியும், நிலுவையில் உள்ள மசோதாக்களை கையெத்திட வலியுறுத்தியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அதன் பின் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
“நீட் தேர்வு மாணவர்கள் கனவை சிதைக்கிறது. மாநில அரசின் உரிமையை பறிக்கிறது. நீட் விலக்கு வேண்டும், பன்னிரெண்டாம் மதிப்பு அடிப்படையில் மருத்துவ சேர்க்கை இருக்க வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை முடிவு. அதற்காகத்தான் ஏ.கே.ராஜன் குழு அமைத்தோம். விலக்கு வேண்டும் என கடந்த செப்டம்பரில் சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம். இதை ஆளுநருக்கு அனுப்பினோம். 142 நாட்கள் ஆகிறது. இன்னும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பின்னர் மீண்டும் மாநில அரசுக்கு திருப்பி அனுப்பிய பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினோம். முதல்வர் நேரடியாக ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தார். அதற்கும் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
“வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு முன்பு நீட் மசோதாவில் முடிவெடுக்க வேண்டிய அவசியம். சட்டமன்ற மாண்புகள் கேள்விக்குறியாக சூழல் ஏற்படுகிறது. ஆளுநர் மசோதா மத்திய அரசுக்கு அனுப்புவது குறித்து எந்த கால வரையறை இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. இன்று கூட ஆளுநர் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. மக்களின் உணர்வுகள், சட்டமன்ற மாண்பில் ஆளுநர் கவனம் செலுத்தவில்லை. இது மிகுந்த வருத்தத்தை தருகிறது. கூட்டுறவு சங்கம் மசோதாவுக்கு கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அதனால் இன்று மாலை நடைபெற இருக்கும் பாரதியார் சிலை திறப்பு விழாவிலும் அதன் பின் நடைபெறும் தேநீர் விருந்திலும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் பங்கேற்காமல் புறக்கணிக்கிறோம்.” என்று கூறினார் தங்கம் தென்னரசு.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM