சென்னை: தமிழக ஆளுநரை இன்று காலை அமைச்சர்கள் திடீரென சந்தித்த நிலையில், நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து பேசுவதற்காக தமிழக அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போத அவர் கூறியது: ” முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரின்ஸ் கஜேந்திரபாபு இன்று கல்வியாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து சமூகநீதி கொள்கை மற்றும் சமத்துவக் கொள்கை குறித்தும், அரசியலமைப்புச் சட்டத்தில் கல்விக்காக கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பற்றியும் ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தேன்.
தமிழக முதல்வரின் கனவுகளும், சமத்துவம் என்ற அடிப்படையில் இருக்கின்ற காரணத்தால்தான் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்றும், உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இதுதான் திராவிட மாடல், இந்த திராவிட மாடலை அம்பேத்கரும் கூறியிருக்கிறார். இதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற தலைவர் முதல்வர் ஸ்டாலின்.
மத்திய அரசு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், அவற்றை எல்லாம் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அது நீட் தேர்வாக இருந்தாலும் சரி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற நுழைவுத் தேர்வாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் மனநிலையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் ராஜ்பவனுக்கு சென்றுள்ளனர். ஆளுநர் கையெழுத்து போடாமல் இருக்கிற கோப்புகள் குறித்து பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்று அவர் கூறினார்.
ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு: சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்தனர்.
முன்னதாக இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆளுநர் சந்திப்புக்குப் பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசும் ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.