ஆளுநருடன் மோதல் உச்சக்கட்டம்: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை:  நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதால், ஆளுநருடன் தமிழக அரசின் மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதையடுத்து, இன்று ஆளுநர் அளிக்கும்  தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருவதால், தமிழக அரசு புறக்கணிப்பதாகவே கருதப்படுகிறது.

தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி ஆளுநர் மாளிகையில் வழக்கமான தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதுபோல இன்றும் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசியல் கட்சிகளுக்கும், நீதிபதிகள் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கம்யூனிஸ்டு, விசிக மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகள் ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ராஜ்பவனுக்கு சென்று தமிழக ஆளுநருடன்  திடீர் சந்திப்பு நடத்தினர். அப்போது, நீட் விலக்கு மசோதா உள்பட நிலுவையில் உள்ள மசோதாக்களை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆளுநர் தரப்பில் சரியான பதில் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் தங்கம் தென்னரசு, ”சட்டப்பேரவையில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக தமிழக முதல்வரிடம் ஏற்கனவே ஆளுநர் உறுதி அளித்திருந்தார். ஆனால்,உறுதியளித்தபடி ஆளுநர் செயல்படவில்லை. பல முறை அழுத்தம் கொடுத்ததும் நீட் மசோதாவை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்.எனவே,நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப நேரில் வலியுறுத்தினோம். ஆனால், எங்கள் இருவரிடத்திலும் எந்தவிதமான உத்திரவாதத்தையும் ஆளுநர் அளிக்கவில்லை.

எனவே, தமிழ்நாடு அரசின் மாண்பு காக்கப்படவில்லை என்பதால் இன்று மாலை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் விலக்கு மசோதா, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு உள்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் வசம் உள்ள நிலையில் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.  நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாது என்று அமைச்சர் கூறியுள்ளது, தமிழக அரசு, ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகஅரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.