சென்னை: தமிழ்ப்புத்தாண்டையொட்டி, இன்று மாலை தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அறிவித்து உள்ளது.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் வழக்கமாக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசு உள்பட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தமிழகஅரசுக்கு எதிரான மனநிலையில் ஆளுநர் செயல்படுவதாக கூறி முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று காலை திடீரென ஆளுநர் மாளிகை சென்று அவரை சந்தித்து பேசினர். அப்போது, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்பட தற்பொழுதுவரை ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 11 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தினர். ஆனால், அதற்கு ஆளுநர் தரப்பில் உத்தரவாதம் வழங்காத நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநரைச் சந்தித்து பேசினோம். நீட் எதிர்ப்பு மசோதாவின் மீது ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டும் என்றும், இது தொடர்பான வலியுறுத்தலை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆளுநருக்கு கொடுக்கவேண்டும் என முதல்வர் நேரில் வலியுறுத்தியிருந்தார். இத்தனைக்கு பிறகும்கூட அந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் தனது ஒப்புதலைத் தரவில்லை.
இதனால் சட்டமன்றத்தின் மாண்புகள் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற மாண்புகளையும், தமிழக மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை. தற்பொழுது வரை ஆளுநர் இதுகுறித்து எந்த உத்திரவாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஆளுநர் கொடுக்க இருக்கும் தேநீர் விருந்து நிகழ்விலும், பாரதியார் சிலை திறப்பு நிகழ்விலும் தமிழக அரசு பங்கேற்காது” என்றார்.
இதைத்தொடர்ந்து திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்காது என்ற அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.