சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், அதிமுக, பாஜக கட்சிகள் பங்கேற்றன.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநரின் தேநீர் விருந்து நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகக் கூறி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திமுக கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஏற்கெனவே அறிவித்தன.
திமுக நிலைப்பாட்டின் அடிப்படையில் முடிவெடுப்போம் என்று காங்கிரஸும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தெரிவித்தன.
அமைச்சர்கள் சந்திப்பு
இந்நிலையில், நேற்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதுடன், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநிலத்தின் உரிமையை தட்டிப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. அதனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்காக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
அந்தக் குழு அளித்த பரிந்துரையின்பேரில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட்டது.
அந்த மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பவில்லை. இது தொடர்பாக பல்வேறு தரப்பு களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பு களைத் தொடர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த சட்ட மசோதாவை அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிவைத்தார். இதனால், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவையை கூட்டி, நீட் விலக்கு சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
முதல்வர் வலியுறுத்தல்
கடந்த மார்ச் 15-ம் தேதி ஆளுநரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார். அப்போது, மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக முதல்வரிடம் உறுதி அளித்த ஆளுநர், அதன்பிறகும் அதை அனுப்பவில்லை.
கடந்த 31-ம் தேதி முதல்வர் டெல்லி சென்றபோது, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை சுட்டிக்காட்டி, வரும் கல்வி ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேதி நெருங்குவதால், அதற்கு முன்பாகவே முடிவெடுத்து, நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க அழுத்தம் தருமாறு கேட்டுக் கொண்டார்.
இத்தனைக்கும் பிறகும்கூட, 208 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் சட்டப்பேரவை யின் மாண்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளன.
உத்தரவாதம் தரவில்லை
இந்நிலையில், முதல்வர் அறிவுரையின்படி ஆளுநரை சந்தித்து, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்புவதற்கான காலவரையறை குறித்து உத்தரவாதம் எதையும் ஆளுநர் அளிக்கவில்லை. அது பரிசீலனையில் இருக்கிறது என்று மட்டும் கூறினார்.
சட்டப்பேரவையின் மாண்பு, தமிழக மக்களின் உணர்வு, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு இவற்றையெல்லாம் பிரதிபலிக்கக் கூடிய வகையில், முதல்வரின் முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் இருப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது. கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான மசோதாவுக்கும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. இதுபோல மேலும் சில சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டி இருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் ஒரு உத்தரவாதத்தையோ, காலவரையறையையோ ஆளுநர் தராத நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று (நேற்று) மாலை நடக்கும் பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும், தேநீர் விருந்திலும் முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வது நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக் கூடியதாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனவே, இந்த இருநிகழ்ச்சிகளிலும் முதல்வரும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
அதிமுக, பாஜக பங்கேற்பு
இந்நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை பாரதியார் சிலை திறப்பு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஆளுநர் தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர்.