ஆளுநருக்கும் மாநில அமைச்சரவைக்குமான மோதல் என்பது வெறும் ஆளுநர் மற்றும் மாநில அரசு இடையேயான மோதல் மட்டுமல்ல, அதன் உண்மையான வடிவமே மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதலாகத்தான் இருந்து வருகிறது.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணித்துள்ளதன் மூலம், ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான முரண்கள் மற்றும் மோதல்கள் தமிழக அரசியலில் சூடான விவாதமாகியுள்ளது.
ஆளுநர் Vs மாநில அரசு மோதல் என்பது மத்தியில் ஆட்சி செய்கின்ற கட்சியே மாநிலத்தில் ஆட்சி செய்யும்போது பெரிய அளவில் எழுவதில்லை. அப்படியே எழுகின்ற சில பிரச்னைகள் அவை கடுமையாவதில்லை. பெரும்பாலும் ஆளுநர் மற்றும் மாநில அரசு இடையேயான மோதல் என்பது மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக மாநிலத்தில் ஆளும் கட்சி இருக்கும்போதுதான் பெரிய அளவில் எழுகிறது. அது தேசிய அளவிலும் சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதல் என்பது வெளிப்படையாக அண்ணாவின் காலத்தில்தான் தொடங்குகிறது. அதற்கு காரணம், தேசியவாத சித்தாந்தத்தை வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சியினுடைய நாட்டைப் பற்றிய பார்வையும் ஆரம்பத்தில் திராவிட நாடு கோரிய திமுகவின் பார்வையிலும் இருந்தே இந்த பிரச்னை தொடங்குகிறது. தற்போது அது திமுக – பாஜக என வந்து நிற்கிறது.
மத்திய அரசின் கொள்கைகளுக்கு அல்லது மத்திய அரசின் நிர்வாகத்துக்கு முரணான வகையில் மாநில அரசு செயல்படும்போது, மத்திய அரசு ஆளுநரின் வழியாக அதை தணிக்கிறது. ஆளுநர் மாநில அரசுக்கு இடையூறாக இருக்கும்போது, மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையில் பெரும் கோபமடைகிறார்கள். ஏனென்றால், முதலமைச்சர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். இதுவே மாநிலத்தில் ஆளும் ஆட்சியாளர்கள், ஆளுநர் இடையூறாக இருக்கும்போது அவ்வளவு கோபம் அடைவதற்கான காரணமாக அமைகிறது. அதன் வெளிப்பாடுதான், அண்ணாவின் புகழ்பெற்ற வாசகமான, “ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும்” தேவையில்லை என்ற வார்த்தைகளை புரிந்துகொள்ளலாம். ஆனால், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரால ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டி தொடர்ந்து ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதல் என்பது அண்ணாவைத் தொடர்ந்து, கருணாநிதி, ஜெயலலிதா தற்போது ஸ்டாலின் வரை வந்து நிற்கிறது.
மாநிலத்தில் ஆளுநரின் அதிகாரம் என்பது கிட்டத்தட்ட குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கு இணயானதாக இருக்கிறது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர், இந்தியக் குடிமகனாகவும் 35 நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்ற ஆளுநரின் தகுதியாக அரசியலமைப்பு கூறுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகிக்கும்போது இது போன்ற மோதல்கள் வந்ததில்லை. அதே போல, மத்தியில் ஒரு கட்சி மட்டுமே பெரும்பான்மை இல்லாமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெறும்போது, மத்திய அரசு ஆளுநர்களை கடுமையாக நடந்துகொள்ளச் செய்வதில்லை.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் இடையேயான மோதல் என்பது வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. 1994ம் ஆண்டு குடியரசு தினத்தன்று ஆளுநர் சென்னாரெட்டி கொடுத்த தேநீர் விருந்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் பங்கேற்கவில்லை. கால் நூற்றாண்டுகளுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது.
அதே நேரத்தில், ஆளுநரும் முதலமைச்சரும் சுமூகமாக இருந்த காலங்களும் தமிழக அரசியலில் நடந்துள்ளன. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்ணாலா இடையேயான நட்பும் புரிதலும் அனைவரும் அறிந்ததே.
ஆளுநர் – மாநில அரசு இடையேயான மோதல் ஏற்படும்போதெல்லாம், ஆளுநரின் அதிகாரம் பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. அப்போதெல்லாம், மாநில அரசு ஆளுநரின் அதிகாரத்தை அரசியலமைப்பு ரீதியாக எதிர்கொள்ள முயற்சிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான், திமுக நாடாளுமன்றத்தில், ஆளுநர் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார். மாநில சட்டமன்றங்கள் இயற்றிய மசோதாவுக்கு தீர்மானங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் முடிவெடுக்க கால வரையறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கால தாமதம் செய்வதாகவும் அவர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்துகிறது. இந்த விவகாரத்தை திமுக அரசியலமைப்பு ரீதியாக கையாள நினைத்தாலும் அரசியலமைப்பு அதற்கு இடமளிக்கவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
ஆளுநர் குறித்து அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்றால், இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி VI, மாநிலங்கள், அத்தியாயம் ஆட்சித் துறையில், ஆளுநர் பற்றி கூறுகிறபோது, “16.3 ஆளுநருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருந்தலும் தேர்வுரை வழங்குதலும்: (2) ஒரு பொருட்பாடு இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ அளுநர் தம் உளத்தேர்வின்படி, செயலாற்ற வேண்டிய ஒரு பொருட்பாடா இல்லையா என்பதைப் பொறுத்துப் பிரச்னை எதுவும் எழுமாயின், ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செய்யும் முடிபே அறுதியானது ஆகும்; ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செயல்பட்டிருக்க வேண்டும் அல்லது கூடாது என்பதைக் காரணம் காட்டி, அவர் செய்த எதனின் செல்லுந்தன்மையையும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது.
(3) ஆளுநருக்கு அமைச்சர்கள் தேர்வுரை எதுவும் வழங்கினார்களா, அவ்வாறாயின் அது யாது என்பது பற்றி நீதிமன்றம் நீதிமன்றம் எதிலும் விசாரிக்கப்படுதல் ஆகாது.” என்று குறிப்பிடுகிறது. அதனால், ஆளுநருக்கு மாநில அமைச்சரவை தேர்வுரை வழங்கலாம். ஆனால், வற்புறுத்த முடியாது. இதைக் குறிப்பிட்டுதான் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அதே நேரத்தில், ஆளுநரின் இந்த அதிகாரத்தை நியாயப்படுத்துவதான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கால தாமதம் செய்வதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்தை முன்வைத்து தமிழக ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்புகிற, அதே வாதம், ஒரு மாநில அரசு மோசமான ஒரு சட்டத்தைக் கொண்டுவருகிறது என்றால் அதை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் அதிகாரத்தையும் கேள்வி எழுப்புவதாக அமையும். அதனால், திமுக அரசு ஆளுநரின் அதிகாரங்களை அரசியலமைப்பு ரீதியாக எதிர்கொள்ள முயல்வது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.
உண்மையில், தமிழக அரசு தொடர்ச்சியாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பதன் மூலமாகவே நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற முடியும். அதற்கு காலதாமதம் ஆகலாம். மற்றபடி, ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு கால வரையறை செய்ய வேண்டும் என்ற அரசியலமைப்பு ரீதியான முயற்சிகள் எல்லாமே முயற்சிகளாக மட்டுமே இருக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“