இஸ்லாமியர்களை குறிவைக்கும் தமிழ்த் திரைப்படங்கள்?

நேற்று வெளியாகி இருக்கும்
பீஸ்ட்
திரைப்பட(மு)ம், ‘இஸ்லாமியருக்கு எதிராக – அவர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து – எடுக்கப்பட்டு உள்ளது’ என இஸ்லமிய அமைப்புகள் சில குற்றம் சாட்டி இருக்கின்றன.

அடைப்புக்குறிக்குள் உள்ள ‘மு’ முக்கியத்துவம் வாய்ந்தது.

காரணம், கடந்த சில வருடங்களாகவே இப்படிப்பட்ட விமசர்னத்தை பல, படங்கள் எதிர்கொண்டு வருகின்றன. தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, இஸ்லாமிய கதாபாத்திரத்தை நாயகன் அல்லது நாயகியாக – முக்கிய கதாபாத்திரத்தில் காண்பிப்பது என்பது இல்லை என்றே சொல்லலாம்.

நிம்பிள்க்கி நம்பிள்க்கி

இஸ்லாமிய கதாபாத்திரங்கள் என்றால், பெரும்பாலும் நகைச்சுவை அல்லது குணச்சித்திர வேடங்கள்தான். குல்லாவும், தாடியும் வைத்து வண்ணக் கைலி – ஜிப்பா அணிந்தபடி வருவார்கள். குதிரை வண்டியோ, கசாப்புக் கடையோ வைத்திருக்கும் அந்த கதாபாத்திரம், நாயகனுக்கு நல்லது செய்யும் கதாபாத்திரமாகவே இருக்கும். அவ்வப்போது, ‘யா அல்லாஹ்.. ஒரு நல்ல மனுசனுக்கு இத்தனை சோதனையா’ என்று, நாயகனுக்காக வருத்தப்படும்.

அநேகமாக, தங்கவேலு அல்லது தேங்காய் சீனிவாசன் இந்த வேடத்தை ஏற்றிருப்பார்கள். அல்லது, அரபி உடை அணிந்து, ‘நிம்பள்க்கி இந்த பணம், நம்பள்க்கி அந்த தங்க பிஸ்கட்’ என்று கள்ளக் கடத்தல் செய்யும் அரேபியராக துணை நடிகர்கள் காட்டப்படுவார்கள். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததாக காட்டப்பட்ட இஸ்லாமிய கதாபாத்திரங்களும் கூட, இப்படி தமிழை கடித்துக் குதறுவதாக காண்பிக்கப்பட்டதும் உண்டு. அரிதாக சில நாயகர்கள் இஸ்லாமியராக. அல்ல அல்ல, இஸ்லாமிய வேடம் போட்டு பாட்டுப்பாடுவதும் உண்டு.

நடிகைகளின் பெயரில் ஜாதி: கிளம்பிய சர்ச்சை!

இன்னொன்றையும் சொல்லலாம். நாயகன், உடல் முழுவதையும் மூடி புர்கா அணிந்தவாறு வில்லன்களை ஏமாற்றி தப்பிச் செல்வார். விதிவலக்காக, ராமன் அப்துல்லா போன்ற மிகச் சில படங்கள், இஸ்லாமிய கதாபாத்திரத்தை நாயகனாக சித்தரித்து வந்தது உண்டு. இவை எதுவும், இஸ்லாமியரை – அம்மத அமைப்புகளை பாதித்தது இல்லை.

விஸ்வரூபம்

ஆனால், 2009ல் கமல் நடித்து வெளியான, ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. அப்படத்தில் பயங்கரவாதிகளை இஸ்லாமியர் என சித்தரத்திருப்பதாகவும், அவர்களை கேள்விகள் இன்றி தண்டிக்க வேண்டும் என படம் சொல்வதாகவும் சர்ச்சை எழுந்தது. ஆனால் எழுந்த வேகத்தில் சர்ச்சை அடங்கியது.

விஸ்வரூபம்

ஆனால், கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்து 2013ல் வெளியான, ‘விஸ்வரூபம்’ படம், இஸ்லாமிய அமைப்புகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானது. ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் குறித்தும் படம் பேசியது. அவர்கள், ‘அல்லாஹூ அக்பர்’ என முழங்குவாக காட்சிகள் இருந்தன. அதோடு, முக்கிய பயங்கரவாதி ஒருவன், தமிழில் பேசுவதாகவும் காண்பிக்கப்பட்டு இருந்தது.

இதையெல்லாம் குறிப்பிட்டு, இஸ்லாமிய அமைப்புகள், ‘விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய வேண்டும்’ என குரல் எழுப்பின. அப்போது ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு, ‘இந்தப் படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்’ என்று படத்துக்கு 15 நாட்கள் தடை விதித்தது. (அதற்கு அரசியல் ரீதியான காரணம் இருந்ததாகவும் பேசப்பட்டது.) பிறகு விவகாரம் நீதிமன்றம் சென்று, தடை விலக்கப்பட்டது. அதோடு, இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த 7 காட்சிகளை நீக்கவும் கமல் சம்மதித்தார். படம் வெளியானது.

துப்பாக்கி

அடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி படமும், இஸ்லாமிய அமைப்பினரின் எதிர்ப்புக்கு உள்ளானது. ‘இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது இந்தத் திரைப்படம்’ என்ற விமர்சனத்தை மீண்டும் இஸ்லாமிய அமைப்பினர் வைத்தனர். போராட்டங்களும் நடத்தினர்.

பிளாக் டிக்கெட்! : மாஃபியா காரணமா? நடிகர்களே காரணமா?

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், தாணு ஆகியோரை அழைத்த தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர், ‘இஸ்லாமிய சமுதாய மக்களின் மனம் புண்படும்படி உள்ள காட்சிகளை தவிருங்கள். இது சம்பந்தமாக இஸ்லாமிய சமூக அமைப்புகளை சார்ந்தவர்களுடன் பேசுங்கள்’ என்றார். இதையடுத்து இரு தரப்பினரும் சந்தித்துப் பேச, சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.

எப்.ஐ.ஆர்.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்க.. கடந்த பிப்ரவரி ( 2022)- ல் வெளியான எப்.ஐ.ஆர். திரைப்படமும், இஸ்லாமிய அமைப்பினரின் எதிர்ப்புக்கு ஆளானது. அதாவது படம் வெளியாகும் முன் வந்த டிரெய்லரே எதிர்ப்புக்கு ஆளானது. இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம், படம் குறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். படத்தை தயாரித்து நடித்த விஷ்ணு விஷால் வீட்டை முற்றுகை இடவும் தடா ரஹீம் தலைமையிலான குழு முயன்றது. ஆனால் இந்த சிறிய சலசலப்பை தாண்டி உரிய நாளில் படம் வெளியானது.

இப்போது பீஸ்ட்

இந்த வரிசையில்தான் பீஸ்ட் படமும் இஸ்லாமிய அமைப்பினரின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், தடா ரஹீம், “துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். படத்தைப் பார்த்த நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர், ‘பிரபலமான ஹீரோ நடிக்கும் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பது கண்டிக்கதக்கது. திரைப்பட தனிக்கை குழு எப்படி இதுபோன்ற திரைப்படம் எடுக்க அனுமதி அளித்தது’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

தடா ரஹீம்

இப்போது மீண்டும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பீஸ்ட் படத்தை எடுத்துள்ளனர். வில்லன் உமர் சரீபை, விஜய் அடிக்கும் காட்சியின் போது தியேட்டரில் படம் பார்க்கும் ஜோசப் விஜயின் ரசிகர்கள் விடாதே அடி கொல்லு என ஆக்ரோஷமா கூச்சல் போடுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலை வரவேண்டும் என நினைத்தவர்கள் வெற்றி பெற்று விட்டார்களோ என நினைக்கத்தோன்றுகிறது. ஆகவேதான், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து தொடர்ந்து படங்கள் வருவதை எதிர்க்கிறோம்” என்கிறார்.

சமீபத்தில் வெளியன மாநாடு திரைப்படம்தான், இஸ்லாமியர் எதிர்கொள்ளும் பிரச்சினயை லேசாக முன்வைத்தது.

தணிக்கை வாரியம்

மேலும், “இந்துத்துவத்தை விமர்சிக்கும் படங்களை திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதிப்பது இல்லை. ஜிப்சி படம் அதற்கு உதாரணம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பல வெட்டுகளுடன்தான் அந்தப் படம் வெளியானது. அதே நேரம், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பலவித தவறான தகவல்களுடன் வெளியான, காஸ்மீர் பைல்ஸ் படம் எந்தத் தடையும் இன்றி சான்றிதழ் பெற்று இந்தியா முழுதும் ஓடுகிறது” என்பதும் சிலரது கருத்தாக இருக்கிறது.

சமாளிப்பு

“இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை மத ரீதியான எண்ணங்களுடன் பயங்கரவாதியாக சித்தரிப்பது தொடரத்தான் செய்கிறது. இதுபோன்ற படங்களின் இயக்குநர்கள், ‘புத்திசாலித்தனமாக’, அந்த ‘ இஸ்லாமிய பயங்கரவாதி கதாபாத்திரத்தை’ எதிர்க்க ‘இஸ்லாமிய கதாபாத்திரம்’ ஒன்றிரண்டை முன்வைப்பாரகள். பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் அதுதான் நடக்கிறது. ஆனால் மக்கள் மனதில், முக்கிய கதாபாத்திரம், ‘இஸ்லாமிய பயங்கரவாதி’ என்கிற எண்ணம்தன் பதியும். இது நல்லதல்ல” என்ற விமர்சனமும் இருக்கிறது.

மாற்றம்

அதே நேரம், “இஸ்லாமியரை பயங்கரவாதிகள் என குறிவைத்து படங்கள் வருவது தவிர்க்கப்பட வேண்டியதே. தவிர பொதுவாகவே,
இஸ்லாமியர்கள்
குறித்த படங்கள், கதாபாத்திரங்கள் தமிழில் மிக மிகக் குறைவே. இதற்கு அச்சமூகமும் காரணம். அதாவது, திரைத்துறையை மதத்தின் பெயரால் இஸ்லாமிய சமுதாயம் ஒதுக்கி வைத்தது.

தவிர சமீபமாக, வெளிவந்த படங்களில் இஸ்லாமிய பெயரோ, சிறு கதாபாத்திரமோ வந்தால் போதும்.. அது நேர்மறையா, எதிர்மறையா என்றுகூட சிந்திக்காமல் அவை இஸ்லாமிய அமைப்புகளால் எதிர்க்கப்பட்டது. இதனாலும் இஸ்லாமியர்களின் உண்மையான வாழ்வியல், திரைப்படங்களில் வரவில்லை.

மத ரீதியான காரணத்தால் தமிழ்த் திரைத்துறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மிகக் குறைவே. அவர்களும்கூட தங்களை இந்துக்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். அல்லது இந்து கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்தனர். இப்படி திரையுலகைவிட்டு இஸ்லாமியர் தள்ளி நிற்பதும், இஸ்லாமியரை திரையுலகம் விலக்கி வைப்பதும் தொடர்கிறது. இந்த நிலை மாறினால், கேரளாவைப்போல இங்கும், இஸ்லாமியரின் வாழ்வியலைச் சொல்லும் படங்கள் வெளியாகும்” என்கின்ற கருத்தும் இருக்கிறது.

இந்த கருத்து சரி என்றே தோன்றுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.