பெங்களூரு:பெங்களூரில் உணவு, சிற்றுண்டி விலையை அதிகரிக்க, சில ஹோட்டல் உரிமையாளர்கள் தயங்குகின்றனர். விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுமோ என அஞ்சுகின்றனர்.
கர்நாடகாவில், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், மின் கட்டணம், காஸ், உணவு தானியங்கள், காய்கறிகள் என அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.இதனால் ஓட்டல் தொழில் நடத்துவது, பெரும்பாடாக உள்ளது. எனவே உணவு, சிற்றுண்டி விலையை அதிகரிக்க திட்டமிட்டனர்.
ஏப்ரல் 1ல் இருந்தே, புதிய விலை உயர்வு அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சில ஹோட்டல்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்கள், விலையை உயர்த்த தயங்குகின்றன.
கொரோனாவால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் உணவு, சிற்றுண்டி விலையை உயர்த்தினால், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என, பெங்களூரில் சில ஹோட்டல் அஞ்சுகின்றனர்.
இது தொடர்பாக, ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:உணவு, சிற்றுண்டி விலையை நாங்கள் உயர்த்தவில்லை. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், 10 சதவீதம் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில், சூழ்நிலையை கவனித்து முடிவு செய்வோம்.
சமையல் எண்ணெய், காஸ், மின் கட்டணம் அதிகரித்துள்ளது. ஹோட்டல் தொழில் நஷ்டத்தில் உள்ளது. தொழிலை காப்பாற்ற வேண்டுமானால், விலை உயர்த்துவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement