சென்னையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அவர். இன்ஸ்டாகிராம் மூலமாக திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஸ்வா என்னும் இளைஞருடன் நட்பாகியிருக்கிறார். ஒருகட்டத்தில் நட்பு காதலாக, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்ட விஷ்வா, ஒருகட்டத்தில் அதை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி அதிர வைத்துள்ளார். `எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. கொடுக்கலைன்னா இந்த வீடியோவை உங்க வீட்டுக்கு அனுப்பிடுவேன்!’ என மிரட்ட, வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணும் கேட்கும் போதெல்லாம் பயத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளார். அப்படி 25 சவரன் நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் பணம், 2 லேப்டாப், காஸ்ட்லியான செல்ஃபோன் போன்றவற்றை அந்தப் பெண் இழந்துள்ளார். இருந்தும் விஸ்வானுடைய டார்ச்சர் தொடர்ந்திருக்கிறது. தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்திருக்கிறார்.
மகளின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர் என்னவென்று விசாரிக்க, நடந்த விஷயத்தைச் சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார் அந்த இளம்பெண். உடனே திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளிக்க, போலீஸார் விஸ்வாவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். விஸ்வாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்ஃபோன்களை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் விஸ்வா தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒருசில இளம்பெண்களின் அந்தரங்கமான ஃபோட்டோக்களும், வீடியோக்களும் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்தப் பெண்களையும் பிளாக்மெயில் செய்து நகை, பணம் போன்றவற்றை விஸ்வா பறித்து ஏமாற்றியிருக்கலாம் என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “சம்பந்தப்பட்ட குற்றவாளியான விஷ்வா எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்தவர். வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவர் இன்ஸ்ட்ராகிராமில் பெண்களிடம் சேட் செய்வதையும், அவர்களை காதல் வலையில் வீழ்த்துவதையும் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளார். அப்படி தன்னுடைய வலையில் விழும் பெண்களை தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துவிட்டு அதை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். அதன்பிறகு ‘நான் கொஞ்சம் கடன்ல இருக்கேன். எனக்கு பணம் தேவைப்படுது’ என பெண்களிடம் சிம்பதி கிரியேட் பண்ண, அவர்களும் காதல் மயக்கத்தில் காசை அள்ளிக் கொடுத்துள்ளனர். பணம் கொடுக்காத பெண்களிடம், ‘உன்னோட அந்த வீடியோ, போட்டோஸை சோஷியல் மீடியாவுல போட்டுடுவேன். உங்க வீட்டுக்கும் அனுப்புவேன்’ என மிரட்டியிருக்கிறார். தற்போது வரை சென்னையைச் சேர்ந்த அந்த பெண் மட்டுமே புகார் கொடுத்துள்ளார். இன்னும் எத்தனை பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.