வாஷிங்டன் : ”உலக விவகாரங்களில் என் ஆர்வத்தை துாண்ட இசையும், குடும்பச் சூழலும் தான் காரணம்,” என, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஹோவர்டு பல்கலை.,யில் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கனுடன், ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது, ‘பல நாடுகளில் துாதராக பணியாற்றி, வெளிவிவகாரங்களில் ஆர்வம் ஏற்பட என்ன காரணம்’ என, மாணவர்கள் கேட்டனர்.
அதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்:
இசையும், குடும்பச் சூழலும் தான் எனக்கு வெளியுறவு விவகாரங்களில் ஆர்வத்தையும், துாதராக பணிபுரியும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தன. 1959ல் வெளியான ‘தி ஹிட்மேக்கர்ஸ்’ எனும் இசை ஆல்பம் என்னை கவர்ந்தது. இன்றும் அந்த இசையை அவ்வப்போது கேட்பேன்.
பாடகர், பாடல் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் ஆவலில் அயல்நாட்டு இசையை ரசிக்கத் துவங்கினேன். என், 10வது வயதில் இந்தியாவில் இருந்து தந்தையுடன் அமெரிக்கா வந்து வசிக்கத் துவங்கினேன். என் குடும்பச் சூழலும் வெளிநாட்டு விவகாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தக் காரணம்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Advertisement