வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘சாலை, எரிவாயு, மின்சாரம், தொலைதொடர்பு போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை, நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குள் முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ‘கதிசக்தி’ எனப்படும், மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, விரைவுபடுத்தும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடந்தது.
பின், அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: வரும் 2024 – 25ம் நிதியாண்டிற்குள், 2 லட்சம் கி.மீ., துாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், மார்ச் 31 நிலவரப்படி, 1.41 லட்சம் கி.மீ., துாரத்துக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. அதுபோல வரும் 2024 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டிய, 34 ஆயிரத்து 500 கி.மீ., துாரம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில், மார்ச் வரை 20 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளன
. இணையப் பயன்பாட்டிற்கான ‘ஆப்டிக்கல் பைபர்’ கம்பிகளை, 50 லட்சம் கி.மீ., துாரத்திற்கு போட தொலைதொடர்பு துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில், மார்ச் நிலவரப்படி, 33 லட்சத்து 997 கி.மீ., துாரத்திற்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின் வினியோக இணைப்புக்கு நிர்ணயித்திருந்த, 4 லட்சத்து 54 ஆயிரத்து 200 கி.மீ., துார இலக்கு இந்தாண்டு மார்ச்சில் முன்னதாகவே முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கதிசக்தி திட்டத்தின் கீழ், 25 மாநில அரசுகளின் செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, மத்திய – மாநில அமைச்சகங்கள் உருவாக்கும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை ஆய்வு செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement