சீதாபூர்: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களை மிரட்டும் வகையில் பேசிய துறவி 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யின் சீதாபூரில் மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2-ல் சீதாபூரில் நடைபெற்ற ஒரு இந்துக்களின் ஆன்மீக ஊர்வலத்தில் கலந்து கொண்டார். வாகனத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு மஹந்த் பஜ்ரங் முனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் சீதாபூரின் கைராபாத் பகுதியின் மசூதியை கடந்து சென்றது. அப்போது துறவியான பஜ்ரங் முனி தாஸ் தம் வாகனத்தில் அமர்ந்தபடி “இதை நான் மிகவும் அன்பான வார்த்தைகளால் கூறிக்கொள்ள விரும்புகிறேன், கைராபாத்தில் ஒரு இந்து மதத்தின் பெண்ணாவது கேலி செய்யப்பட்டால், கைராபாத்தின் முஸ்லிம் மருமகள்களை அவர்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து பாலியல் பலாத்காரம் செய்வேன்’’ என முஸ்லிம் பெண்களை மிரட்டும் வகையில் விடுத்தார்.
இந்த மிரட்டலின் வீடியோ காட்சிகள், சமூகவலை தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாக, விவகாரம் சர்ச்சையானது. பின்னர் தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று உ.பி.யின் டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில் மிரட்டல் சம்பவம் நடந்த 11 நாட்களுக்கு பிறகு பஜ்ரங் முனி தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆசிரமத்தில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. வெறுப்புப் பேச்சு, இழிவான அறிக்கைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பஜ்ரங் முனி மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அதில், “எனது பேச்சு தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டது. அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.