நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கும் என் மனைவிக்கும் எமக்கென்று ஒரு சொந்த வீடு கட்டவேண்டும் என ஒரு பெரிய ஆசை, கனவு இருந்தது! ஆனால் அந்த ஆசை, கனவை எல்லாம் இந்த அரசாங்கம் உடைத்துவிட்டது.
இன்று சீமெந்து விலை, இரும்பு கம்பியின் விலை என அனைத்தினதும் விலை நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. வீடு கட்ட ஆரம்பித்த நாளில் இருந்த விலை இன்று இல்லை.
அப்படி இருக்கும் போது நான் என்னவென்று வீடு கட்டுவேன்.
நான் இரத்தினபுரையை சேர்ந்தவன். நான் இன்று முப்படைகளின் வீரர்களிடமும் கூறிக்கொள்கிறேன் நாம் இன்று ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்த்து கொண்டிருக்கின்றோம். அவர்களை பாதுகாப்பதில் எந்த பயனுமில்லை.
வெளியில் வாருங்கள்.
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்கு பொலிஸாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்மால் எதுவும் பேசமுடியாது. இருந்தாலும் நான் இன்று சீருடையுடன் வருகை தந்து உங்கள் மத்தியில் பேசுவதற்கு காரணம் எனக்குள் வலி இருப்பதால் தான்.
எனக்கு தெரியும் நாளைக்கு நிச்சயமாக என் வேலை எனக்கு இல்லாமல் போகும்!
நாளைக்கு ஒரு புதிய நாடு உருவானால் எமக்கு அல்ல எம் பிள்ளைகளுக்கே அது சொந்தம்.
நான் இங்கு வந்தது என் மனைவிக்கு தெரியாது. இன்று காலை 7 மணிக்கு தான் நான் வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.