லக்னோ: உத்தரபிரதேசத்தை சேர்ந்த குட்கா வியாபாரி பதுக்கி வைத்திருந்த ரூ. 6.3 கோடி ரொக்கத்தை ஜிஎஸ்டி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் சுமேர்பூர் நகர் பகுதியில் வசிக்கும் குட்கா வியாபாரி ஜெகத் குப்தாவின் வீட்டில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக் குழு திடீர் சோதனை செய்தது. 15 பேர் கொண்ட குழுவினர் கடந்த 12ம் தேதி முதல் நேற்று மாலை வரை சோதனை நடத்தினர். விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் வீட்டில் இருந்த பீரோவில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கைப்பற்றப்பட்ட பணத்தை பெரிய டிரங்கு பெட்டிகளை ஸ்டேட் வங்கியில் இருந்து அதிகாரிகள் வாங்கிவந்து மூன்று டிரங்கு பெட்டியில் அடுக்கினர். அதன்பின் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் டிரங்கு பெட்டியில் நிரப்பப்பட்டு ஹமிர்பூர் ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக் குழு நடத்திய சோதனையில் குட்கா வியாபாரி ஜெகத் குப்தாவின் வீட்டில் இருந்து 6 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 800 ரூபாய் கைப்பற்றப்பட்டது. கிட்டத்தட்ட 18 மணி நேரம் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட ஜெகத் குப்தா மீது வழக்குபதியப்பட்டுள்ளது’ என்றனர்.