கன்னியாகுமரி: 9 பழங்குடியின கிராமங்களில் தொடர் மின்தடை-படிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட 9 பழங்குடியின கிராமங்களில் தொடர்ந்து மின்வெட்டு நிலவுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கக்கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ளது கோதையார் மலையோர கிராமம். இந்த கிராமத்தை சுற்றி மாங்காமலை, குற்றியார், முடவன்பொற்றை, விளாமலை, கல்லார், கிளவியார், தச்சமலை, தோட்ட மலை, எட்டாம்குன்று என 9 கிராமங்கள் உள்ளன. இந்த 9 கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடியிருப்புகள் இருக்கின்றன. இந்தக் குடியிருப்புகளுக்கு ஒகி புயலுக்கு முன்பு கோதையார் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வந்தது.
image
இந்நிலையில், ஒகி புயலில் இந்த மலையோர கிராமத்தில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றி எந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அதன் பிறகு, இந்த கிராமத்துக்கு பேச்சிப்பாறை, குலசேகரம் ஆகிய பகுதிகளில் இருந்து மின்சாரத்தை கொண்டு வந்து இந்த கிராமங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இருந்தபோதிலும், இந்த 9 கிராமங்களிலும் தொடர்ந்து மின் தடை ஏற்ப்பட்டு வருகிறது. மின் கம்பிகளில் ஏற்படும் பழுதை முறையாக மின்சார ஊழியர்கள் கண்டு பிடித்து சரிசெய்யாமல் இருப்பதால், இந்த கிராமங்களில் தொடர்ந்து 10 முதல் 20 நாட்கள் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களால் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கிராமங்களில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் கேட்ட போது, இந்த கிராமத்தில் ஏற்படும் மின் தடைக்கு நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது ஏற்பட்டிருக்கும் மின் தடையை சரிசெய்து உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.