பெங்களூரு-கர்நாடகாவில், பாரம்பரிய முறைப்படி ‘குரான்’ ஓதி, கோவில் தேர்த் திருவிழா துவங்கியது, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இருந்தது.
சர்ச்சைகர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளி, கல்லுாரிகளில், ‘ஹிஜாப்’ எனப்படும், தலை மற்றும் முகத்தை மூடும் துணி அணிய, இஸ்லாமிய மாணவியருக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.இதே போல, திருவிழாக்களின்போது, கோவிலுக்கு அருகில் கடைகள் வைக்க, முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.இந்நிலையில், இங்கு, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோவிலில் தேர்த் திருவிழா ஒன்று நடந்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் உள்ள, 12ம் நுாற்றாண்டை சேர்ந்த சென்னகேசவா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பெருமாள் கோவிலான இங்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்கவில்லை.புனித நுால்இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
வழக்கமாக தேர் புறப்படுவதற்கு முன், இஸ்லாமியர்களின் புனித நுாலான குரானில் இருந்து சில வாசகங்கள் ஓதப்படுவது வழக்கம். அதன்படி, தேர் புறப்படுவதற்கு முன், ஹிந்து மக்கள் புடைசூழ, இஸ்லாமிய மத குருவான காஜி சையது சஜீத் பாஷா என்பவர், குரானில் இருந்த வாசகங்களை ஓதினார். மேலும், இதன் ஒரு நிகழ்வாக, கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தர்காவுக்கு கரகமும் எடுத்துச் செல்லப்பட்டது
.இதற்கு, சில ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நடைமுறைகள், ஹிந்து மதத்திற்கு எதிரானவை என்றும்; இவற்றை இனி பின்பற்றக்கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர். எனினும், கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் அவற்றை பொருட்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி, அனைத்து சடங்குகளையும் செய்தனர்.