பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை தொடர்பாக அம்மாநில மந்திரி ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா நேற்று அறிவித்தார். முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை இன்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் மரணம் தொடர்பான வழக்கில் மாநில மந்திரி ஈஸ்வரப்பாவை கைது செய்யக் கோரி பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகமான விதான் சவுதாவில் இரவு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், உயிரிழந்த கான்ட்ராக்டர் சந்தோஷ் சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது தாய் மற்றும் மனைவி குற்றம் சாட்டி உள்ளதாக கூறினார். மந்திரி மீது போடப்பட்ட வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் மந்திரி ஈஸ்வரப்பா பதவி விலகுவது தீர்வாகாது என்றும், அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய வேண்டும் என்றும் சிவகுமார் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்…
பதற்றத்தை அதிகரிக்கும் ஒலிப்பெருக்கி அரசியல்- அமைதியை சீர்குலைக்க விட மாட்டோம் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு