கர்நாடகா மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா- ஈஸ்வரப்பா அறிவிப்பு

பெங்களூரு:
கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த அரசு பணிகள்  காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் மந்திரி ஈஸ்வரப்பா
40 சதவீதம் கமிஷன் கேட்பதாக சந்தோஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.  
தனது தற்கொலைக்கு மந்திரி ஈஸ்வரப்பாதான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, ஈஸ்வரப்பாவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை தொடர்பாக கர்நாடக மந்திரி ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக 2 பிரிவுகளின் கீழ் உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல ஈஸ்வரப்பா உதவியாளர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது.  
மந்திரி ஈஸ்வரப்பா பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்தன. எனினும், நான் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று ஈஸ்வரப்பா கூறிவந்தார். ஈஸ்வரப்பா தன்னை சந்திக்க வருமாறு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். 
இந்த நிலையில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை நாளை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாகவும் தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஈஸ்வரப்பா தெரிவித்திருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.