நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு விலக்கு மாசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர், ஆளுநர் ஆர்.என். ரவி இந்த மசோதவை, தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியது. அதில், மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், ஆளுநர் இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாமதம் செய்து வருவதாக, தமிழக அரசும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 15-ம் தேதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வு விலக்கு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 14) காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த வித பதிலும் அளிக்காத காரணத்தால், இன்று மாலை (ஏப்ரல் 14) ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆளுநரை சந்தித்த இன்னர், ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூரியதாவடு: “நீட் மசோதவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக் குறியாகியுள்ளது. மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க எந்தவித கால வரம்பையும் ஆளுநர் தெரிவிக்கவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
முதல்வரிடம் ஒப்புதல் அளித்தபடி ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சட்டப்பேரவையின் மாண்பு, ஏழை எளிய மக்களின் உணர்வு, கிராமப்புற மாணவர்களின் கனவு இவற்றை பிரதிபலிக்கும் இந்த மசோதாவைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது வருத்தத்தை தருகிறது. எனவே ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் தமிழக அரசு கலந்து கொள்ள இயலாது” என்று அவர் கூறினார்.
மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்கிற கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பிரதிபலிக்கிற வகையில், முதல்வரின் முன்னெடுப்பில் இயற்றப்பட்டிருக்கிற நீட் தேர்வு விலக்கு சட்டத்துக்கு ஆளுநர் தனது ஒப்புதலைத் தராமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.
இதே போன்ற ஒன்றைதான், கூட்டுறவு சங்கங்கள் குறித்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருக்கிறார். அதைத் தவிர இன்னும் சில சட்டங்களின் கோப்புகள் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. அதையெல்லாம் எடுத்துச் சொல்லி இவற்றை செய்வதற்கான, ஒரு உத்தரவாதத்தையோ கால வரையறையோ ஆளுநர் வழங்காத நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடக்க இருக்கக்கூடிய நிகழ்வுகளிலும் அதைத்தொடர்ந்து நடக்கக்கூடிய பாரதியார் சிலை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அதைத் தொடர்ந்து நடைபெற உள்ள தேநீர் விருந்திலும் முதலமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டால், அது நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினை குலைக்கக்கூடிய வகையிலும் குறைக்கக்கூடிய வகையிலும் இருக்கும் என்பதாலும் அதே போல, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வகையிலும் அமைந்துவிடும் என்ற காரணத்தல் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள இரு நிகழ்வுகளிலும் நாங்கள் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.
இதற்கு செய்தியாளர்கள் இந்த காரணங்களை ஆளுநரிடம் தெரிவித்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநரிடம் நாங்கள் பேசியிருக்கிறோம். இதை ஆளுநரிடம் விளக்கி பேசியிருக்கிறோம். ஆளுநர் நாங்கள் சொன்னதை கேட்டுக்கொண்டார்கள். ஆயினும், ஆளுநர், சட்ட மசோதாவை உடனடியாக அனுப்பி வைப்பதற்கான உத்தரவாதத்தையோ, காலவரையறையையோ எங்களிடம் தெரிவிக்காத காரணத்தால் ஆளுநர் மாளிகை நிகழ்வுகளில் எங்களால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.” என்று கூறினார்.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டத்தை மீறிய செயலா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு இயங்கக்கூடியவர். ஜனநாயக மரபுகளை மாண்புகளை போற்றக்கூடிய வகையில் மீண்டும் இந்த சட்டம் இயற்றப்பட்டு, சட்ட முன்வடிவம் கொண்டுவரப்பட்டு அவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கடந்த முறை முதல்வர், ஆளுநரை சந்திக்கின்றபோது, இந்த விஷயத்தில் இந்த மசோதாவை அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அனுப்பி வைப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், இதுவரை ஒப்புதல் வராதா காரணத்தால், முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், அமைச்சர் மா. சுப்பிரமணியனும் நானும் ஆளுநரை சந்தித்து உடனடியாக இந்த சட்டத்தை ஒன்றிய அரசினுடைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இன்றும் அவர் எங்களிடம் எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்காத நிலை ஏற்பட்டிருக்கிற காரணத்தால், நாங்கள் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“