குருப் பெயர்ச்சியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கும்ப ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான், இன்று அதிகாலை 4.16 மணிக்கு மீன ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, குரு பகவானை வழிபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இருக்கும் 12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கருவடிக்குப்பத்தில் உள்ள பழமையான குரு சித்தானந்த சாமி கோவிலில் குருபகவானுக்கு, மூலிகைப் பொருட்களுடன் சிறப்பு யாகம் நடத்தி, சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர் அருகேயுள்ள தென்குடிதிட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் மங்கள குருவிற்கு நவதானியங்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள் கொண்டு சிறப்பு யாகபூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM