மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், வரும் கல்வியாண்டில் சிறப்பு ஒதுக்கீடு படி மாணவச் சேர்க்கைக்கான இடங்கள் வழங்கப்படக் கூடாது என அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே15 அல்லது 16 பிரிவுகளில் இந்த சிறப்பு ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள், MP விருப்ப உரிமையின் கீழ் பரிந்துரைக்கும் 10 மாணவர்களுக்கு இடங்கள் உள்ளிட்டவை இந்த சிறப்பு பிரிவில் அடக்கம்.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதை நிறுத்தச் சொல்லி மத்திய அரசிடமிருந்து அனைத்து கேந்திரிய பள்ளிகளுக்கும் ஏப்ரல் 12-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.
எம்.பி.யும் பாஜகவின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி இந்தப் பிரச்னையை பாராளுமன்றத்தில் பேசியவர்களில் ஒருவர். எம்.பி.க்களின் ஒதுக்கீட்டில் வரும் 7880 இடங்கள் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள சுஷில் குமார் மோடி, “சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இதனால் ஏற்படும். ஊழலுக்கு வழியில்லாது போகும். இந்த சேர்க்கைகள் மெரிட் ரீதியாகவோ இடஒதுக்கீட்டிலோ வருவதில்லை. அரசின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “ஒரு எம்.பி பத்து மாணவர்களைப் பரிந்துரைக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இதுவரை 364 பேர் என்னிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டு மனு அளித்து இருந்தார்கள். அத்தனை பேருமே முக்கியமானவர்கள்தான்! இந்த கேந்திரிய வித்யாலயா பரிந்துரைகளால் எம்.பி களுக்கு இடம் கிடைத்தவர்களிடம் ஏற்பட்ட நல்ல பெயரைவிட செய்ய முடியாமல் போனதால் பிறரிடம் ஏற்பட்ட கெட்ட பெயரே மிக மிக மிக அதிகம். இந்த நடைமுறை நீக்கப்பட்டதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியே! ” என தெரிவித்திருக்கிறார். சிறப்பு பிரிவுகளிலான சேர்க்கை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறதா அல்லது நிரந்தரமாகவா என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.