கே.ஜி.எப். 2: மீது நடவடிக்கை! இது விமர்சனம் அல்ல.. எச்சரிக்கை!

கே.ஜி.எப். முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் அடுத்த பாகமான கேஜிஎப் 2, படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியது. கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இன்று வெளியாகி இருக்கிறது.

அதிக பணம் வாங்கும் நடிகர்களும், செலவும்தான் பிரம்மாண்டம் என்றால், உண்மையிலேயே மிக பிரம்மாண்டமான படம்தான் இது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இசை: ரவி பஸ்ரூர்.

கேஜிஎஃப் தங்கச் சுரங்கப் பகுதியை, தாதா
ராக்கி
, தனதாக்கிக் கொள்வதோடு முதல் பாகம் முடிந்தது. இந்த இரண்டாம் பாகத்தில், ராக்கிக்கு வரும் எதிர்ப்புகள், அதை அவர் சமாளிக்கும் சம்பவங்கள், இறுதியில் அவர் வெற்றி பெற்றாரா என்பதைச் சொல்கிறது.

மறைமுக விளம்பரம்

படங்களில், புகைப்படிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ வரும்போது, அவை குறித்த எச்சரிக்கை வாசகங்கள் திரையில் கீழே ஒளிரும். இந்தப் படத்தில், அந்த வாசகங்களை நிரந்தரமாகவே வைத்துவிடலாம் போலிருக்கிறது.

‘மற்ற படங்களில் இல்லையா’ என்று கேட்கலாம். இந்தப் படத்தில் மிக அதிக காட்சிகள் அப்படி வருகின்றன. குறிப்பாக, நாயகன் யாஷ், தனது உடல் உறுப்பு போல சிகரெட்டை வாயில் பொறுத்தி வருகிறார். ‘தமிழ்நாட்டு இளைஞர்கள், புகைப்பழக்கத்துக்கு ஆளாவதற்கு திரைப்படங்களில் நாயகர்கள் ஸ்டாலாக புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பது முக்கிய காரணம்’ என ஒரு ஆய்வு தெரிவித்தது நினைவிருக்கலாம்.

பா.ம.க. இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ஒருமுறை, “சிகரெட் பிடிப்பவர்கள், உரிய வயதாகும் முன்பே இறந்து போய்விடுகின்றனர். அப்படி ‘இழந்த’ வாடிக்கையாளர்களுக்கு பதிலாக புதியவர்களை ஈர்க்கவே, சிகரெட் நிறுவனத்தினர் திரைப்படங்களில் மறைமுகமாக விளம்பரம் செய்கின்றனர். இப்பேராபத்து உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்” என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

பெண்கள் துணிச்சல் இல்லாதவர்கள்!

கே.ஜி.எப். படத்தில் இன்னொரு வவகாரம், பெண்கள் மீதான அத்துமீறல். நாயகியை வலுக்கட்டாயமாக கடத்தி வருகிறான் ஒருவன். அவள், ‘என்னை ஏன் கடத்தி வந்தாய்?’ என கேட்க, ‘வச்சுக்கத்தான்’ என்கிறான் கிண்டலாக.

‘வச்சுக்க’ என்றால் என்ன அர்த்தம் என்று அனைவருக்கும் தெரியும்.

இன்னொரு காட்சியில் அந்த நாயகி, தன்னை தற்காத்துக் கொள்ள,, கடத்தி வந்தவனை நோக்கி துப்பாக்கி நீட்டுகிறாள். அவனோ, மெல்ல நடந்து வந்து, ‘இந்தா இந்த ஜூஸை குடிச்சுக்க… நம்ம கல்யாணத்துக்கு முன்னால ஒரு அறையில இருக்கக்கூடாதுல்ல.. அதான் உன்னை விட்டுட்டு பக்கத்து அறைக்குப் போறேன்’ என்கிறான்.

கே.ஜி.எஃப் 2

‘தன்னை கயவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள, பெண்கள் கத்தியையும் ஏந்தலாம்’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், கையில் துப்பாக்கி இருந்தாலும் சுடும் தைரியம் பெண்களுக்கு இல்லை என்பதைப் போல காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

சரி, அந்த நாயகயை பாடுபடுத்துபவன் யார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அவன் படத்தின் வில்லன் அல்ல, நாயகன்தான்! பெண்கள் மீதான வன்முறைதான், ‘ஆண்மை’ என்ற முட்டாள்த்தனத்தை – மூர்க்கத்தனத்தை விதைக்கும் காட்சிகள் இவை.

வன்முறை

அடுத்து, படம் முழுதும் வன்முறைகள. துப்பாக்கிச் சத்தம் கேட்காத காட்சிகள் மிகக்குறைவு. அந்த நேரத்தில் கட்டைகளாலும் கைகளாலும் அடித்துக்கொள்கிறார்கள். திரையை மீறி, திரையங்குகளில ரத்தம் தெறிக்கும் உணர்வு.

வாளால் கையை வெட்டி எறிவது, கத்தியால் கழுத்தை அறுப்பது என அதிக வைக்கும் காட்சிகள் ஏராளம். இது போன்ற காட்சிகளைப் பார்த்து இளைஞர்கள், சிறுவர்கள் தடம் மாற வாய்ப்பு உண்டு.

சண்டிகர் நகரில், ஐந்து வயது வயது சிறுமி திடீரென காணாமல் போனார். அடுத்த சில மணி நேரங்களில், அந்த சிறுமியின் பெற்றோருக்கு அலைபேசிய ஒருவன், இருபது லட்சம் தராவிட்டால் சிறுமியை கொன்று விடுவதாக மிரட்டி இருக்கிறான். போனை டிரேஸ் செய்த காவல்துறை அந்த கடத்தல் நபரை கண்டு பிடித்தது. சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவன்தான் அவன். வயது, பதினாறு வயது சிறுவன். விசாரணையில், ‘திரைப்படங்களில் கடத்தல் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து, இது பணம் சம்பாதிக்க எளிய வழி என நினைத்து செய்தேன்” என்று அழுதான் அந்த சிறுவன்.

சேலம் ஆலமரத்துக்காடு நாற்பது வயது பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்த கொலை செய்தனர், முரளி, விஜயகுமார் ஆகிய இளைஞர்கள். விசாரணையில், ‘கொன்று விட்டு தப்பிப்பது எளிது என திரைப்படங்களைப் பார்த்து நினைத்துவிட்டோம்’ என கதறினர்.

இஸ்லாமியர்களை குறிவைக்கும் தமிழ்த் திரைப்படங்கள்?

கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு சம்பவம். டெல்லி, ஜகாங்கீர்புரி பகுதியில் ஷிபு என்பவர், கொல்லப்பட்டுக் கிடந்தார். காவல்துறை விசாரணையில், மூன்று சிறுவர்கள் அந்த நபரை கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. அந்த கொடூரத்தை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருந்தனர் சிறுவர்கள்.

“புஷ்பா போன்ற, கேங்ஸ்டர் படங்களைப் பார்த்து இப்படி செய்தோம். கொலை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து, பெரிய டான் ஆக திட்டமிட்டோம்” என அழுதனர் சிறுவர்கள். சினிமா எப்படி சீரழிக்கும், அதுவும் ‘பிரம்மாண்டமாய்’ காட்டப்படும் கொடூர காட்சிகள் சிறுவர், இளைஞர் மனதை எப்படி திசை திருப்பும் என்பதற்கான சில உதாரணங்களே இவை.

‘காவலுக்கு’ மரியாதை இல்லை

அது மட்டுமல்ல.. இந்த கேஜிஎப் 2 திரைப்படத்தில் ஒரு காட்சி. தாதா ராக்கி வசம் இருக்கும் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்யும் முயற்சியில் இறங்குகிறது சி.பி.ஐ. முன்னதாக தகவல் தெரிந்து, தங்கக் கட்டிகளை இடமாற்றம் செய்து விடுகின்றனர், ராக்கியின் கையாட்கள். ஆனாலும் ஒரே ஒரு தங்கக் கட்டி மட்டும் தவறுதலாக விடுபட, சி.பி.ஐ. வசம் அதுமட்டும் கிடைக்கிறது.

கே.ஜி.எஃப் 2

இந்த விசயம், தாதா ராக்கிக்கு தெரிய உடனே, ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு, சி.பி.ஐ. அலுவலகம் செல்கிறான். இவனைப் பார்த்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கிருக்கும் காவர்கள் அனைவரும் பயந்து எழுந்து நின்று, அந்த ஒரு தங்கக்கட்டியை ராக்கியிடம் பவ்யமாகக் கொடுக்கின்றனர்.

அதன் பிறகு கிளம்பும் ராக்கி, சும்மா போகவில்லை.

நவீன துப்பாக்கியை வைத்து சி.பி.ஐ. அலுவலத்தையே தகர்க்கிறான். பல காவலர்கள் கொல்லப்படுகிறார்கள். இதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு, நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ. மீது.. ஏன், காவல் துறை மீதே எப்படி மதிப்பு வரும்?

நாடாளுமன்றத்தை விட தாதா உயர்வானவன்!

இன்னொரு காட்சி.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ராக்கியை பிடிக்க உத்தரவிடுகிறார் புதிதாக பொறுப்பேற்கும் பெண் பிரதமர். இதை அறிந்த ராக்கி, பெண் பிரதமரை சந்திக்க நாடாளுமன்றத்துக்கே வருகிறான். வரவேற்பறையில் கால் மேல் கால் போட்டு அமர்கிறார். உடனடியாக பிரமதரிடமிருந்து உள்ளே வரும்படி அழைப்பு வருகிறது. அருகில் இருப்பவரிடம் சிறிது நேரம் வேண்டுமென்றே பேசிவிட்டு பிரதமர் அழைக்குள் நுழைகிறான் தாதா ராக்கி.

அங்கே, பிரதமரின் மேசையில் பூலோக உருண்டை இருக்க, அதை கைகாளால் சுற்றிக்கொண்டே, எடக்கு மடக்காக பிரமதரிடம் பேசுகிறான். அதாவது, ஒரு நாட்டின் பிரதமரை விட, தாதா உயர்ந்தவன் என்கிற எண்ணத்தை விதைக்கும் காட்சி இது.

இதைவிட கொடுமையான காட்சி ஒன்று உண்டு.

நாடாளுமன்றத்தில் துப்பாகியோடு புகுந்து, ராஜ நடைபோட்டு வருகிறான் தாதா விக்கி. பெண் பிரதமர் பயந்து நடுங்குகிறார். மெல்ல நடைபோடும் ராக்கி, அங்கே இருக்கும் முன்னாள் பிரதமரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். இந்தியாவின் அரசியல் சாசனப்படி உயர் மதிப்பு பெற்றது நாடாளுமன்றம். அதையே இழிவு செய்வது போன்ற காட்சி இது. நாடாளுமன்ற ஜனநாயகம் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் சட்டப்படி நாட்டில் உயர் அமைப்பு அதுதான். அதையே அவமானப்படுத்தும்படியான காட்சி! போனால் போகிறது என ‘சித்தரிக்கப்பட்ட காட்சி இது’ என திரையின் அடிப்பாகத்தில் ஆங்கிலத்தில் போடுகிறார்கள்.

நடிகைகளின் பெயரில் ஜாதி: கிளம்பிய சர்ச்சை!

அப்படி வார்த்தைகளைப் பதிந்தால், அனுமதித்துவிடலாமா?

நாடாளுமன்றத்தை விட ஒரு தாதா உயர்ந்தவன் என்பதது போன்ற இந்த காட்சிகளால், இளைஞர்கள், சிறுவர்கள் திசை மாற மாட்டார்களா? தேசத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும் விசயமல்லவா இது!

பார்வைகள் இப்படி..

ஊடகங்களிலேயே ஆகப்பெரும்போலோர் இதை உணர்வதாக இல்லை என்பது கூடுதல் வேதனை. “கே.ஜி.எஃப்பை தனது சுண்டு விரல் அசைவில் வைத்து ஆட்சி செய்யும் ராக்கியை அழிக்கத் துடிக்கும் குள்ளநரிக் கூட்டத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கு எதிரான யுத்தத்தில் ராக்கி என்ன ஆனான் என்பதுதான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ என விமர்சனம் எழுதுகிறது ஒரு பிரபல இதழ்.

ராக்கியை அழிக்க நினைக்கும் சக தாதாக்களை குள்ள நரிக்கூட்டம் என்று விளிப்பது, போகட்டும். அவனைப் போன்ற தாதா மீது நடவடிக்கை எடுக்கும் அரசை அதிகார வர்க்கம் என்று குறிப்பிட்டு ஆதங்கப்படும் நிலையில் – அந்த தாதா ‘ஹீரோ’வுக்கு ஆதரவான மனநிலையில் – ஊடகர்கள் இருப்பதை என்னவென்று சொல்வது!

இவர்களே இப்படி என்றால், படம் பார்க்கும் சாமானியன் – குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் – மனதில் என்ன விதமான தாக்கத்தை கேஜிஎப் 2 ஏற்படுத்தும்! மக்களுக்கு, இந்த ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் கேஜிஎப் 2 படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆனால், தேசப்பற்று குறித்து பாடம் எடுப்பவர்கள் ஆட்சியில்.. அவர்களால் நியமிக்கப்பட்டு இருக்கும் தணிக்கை அதிகாரிகள் அனுமதி அளித்த படம்தானே இது.

அவர்களது கண்களுக்கே இந்த காட்சிகள் – ஆபத்துகள் ‘தெரியவில்லை’.

பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.