சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய  பிரார்த்திக்கின்றேன் 

மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய  பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தமிழ் சிங்கள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். எமது அரசாங்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எவ்வாறாயினும் சிங்கள, தமிழ் புத்தாண்டுப் பிறப்பை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்பது பழங்காலத்திலிருந்தே இடம்பெறும் நமது பாரம்பரியம் ஆகும். இந்த ஆண்டும் அந்த எதிர்பார்ப்புகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

அதேபோன்று, புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுபவிப்பதற்காக தமது பிள்ளைகளுடன் இணைவதற்கான வாய்ப்பை இழந்த, விசேட கடமைகளில் ஈடுபட்டு இருப்பவர்களைப் போன்று, வெளிநாடுகளில் இருக்கும் அனைவரினதும் அர்ப்பணிப்பை நினைவுகூருகிறேன்.

            மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

கோட்டாபய  ராஜபக்க்ஷ

2022 ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.