சூரியன், ராகு, புதன் மே‌ஷ ராசியில் வீற்றிருப்பதால் நோய் தாக்கம் குறையும், மழை அதிகரிக்கும்- ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு

வேலூர்:

ஆற்காடு கா.வெ.சீதா ராமய்யர் சர்வ மகூர்த்த பஞ்சாங்கத்தை லாவன்யா பதிப்பக கணிதர் கே.என். சுந்தராஜன் ஐயர் கணித்துள்ளார். அவர் பஞ்சாங்கத்தில் கணித்துள்ள தகவல் படி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது.

அதன்படி தற்போதுள்ள நடைமுறைகள் படி பஞ்சாங்கத்தில் கணித்திருப்பதாவது:-

மே‌ஷ ராசிக்கு சூரியன் இன்று காலை 7.36 மணிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி செவ்வாய் ஓரையில் சுபகிருது புத்தாண்டு பிறந்தது. ஏற்கனவே மே‌ஷ ராசியில் புதன், ராகு வீற்றிருக்கின்றனர். தற்போது சூரியன் பெயர்ச்சியானதால் மே‌ஷ ராசியில் புதன், ராகு, சூரியன் இருக்கின்றனர். இது அரிய நிகழ்வாகும். இதனால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.

ஆன்லைன் பரிவர்த்தனை அதிகளவில் நடக்கும். மழை பொழிவும் அதிகமாக இருக்கும் வெயில் தாக்கம் இருந்தாலும் மழையால் குளிர்ச்சி சூழ்நிலை ஏற்படும். வி‌ஷ காய்ச்சல் பரவும் ஆனால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது. 3 நாட்களில் பாதிப்பு சரியாகிவிடும்.

மகா சங்ராந்தி புரு‌ஷர் ஆண்புலி வாகனத்தில் பாலவ நாம கரணத்தில் வருகிறார். இதனால் உயிரினங்களுக்கு உண்ண உணவு தங்குமிடத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.

காடு செழிப்புடன் காணப்படும். தமோ மேகம் வடக்கு திசையில் உற்பத்தியாகி வடமாநிலங்களில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். மீனத்தில் ஆட்சிபெற்ற குரு தனது 5-ம் பார்வையாக கடக ராசியையும், 7-ம் பார்வையாக கன்னி ராசியையும், 9-ம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்ப்பதால் உலகம் முழுவதும் பரவலாக நல்ல மழைபெய்து சுபிட்சம் பெருகும் கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதனால் ஏரி, குளங்களில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயம் பெருகும்.

இந்த ஆண்டு சூரியன், சந்திரன் ஆகிய 2 கிரகணங்களும் செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனால் நோய் தாக்கம் பெருமளவில் குறையும், தொற்று நோய் அழியும். கல்வி வளர்ச்சி ஏற்படும். புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீராக செயல்படுத்தப்படும்.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலவநாம கரணத்தில் ஆண் புலி வாகனத்தில் மகா சங்கராந்தி புரு‌ஷர் வருவதால் இந்த ஆண்டு ராகு, கேது, குரு பெயர்ச்சி இல்லை.

புதன், ராகு, சூரியன் ஒரே வீட்டில் இருப்பதால் அதிக பலன்களே கிடைக்கும்.

இவ்வாறு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.