புதுடெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆங்கிலேயேர் ஆட்சியில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது,போலீஸார் கண்மூடித்தனமாக கூட்டத்தினரை நோக்கி சுட்டதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த ஜாலியன் வாலாபாக்கில் உள்ள தியாகிகள் நினைவிடம் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் 122-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘‘1919-ம் ஆண்டு இதே நாளில் ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அந்தத் தியாகிகளின் ஒப்பற்ற துணிச்சலும் தியாகமும் வருங்காலத் தலைமுறையினரை வழிநடத்தும். கடந்த ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் புதுப்பிக்கப்பட்ட தியாகிகள் நினைவிடத்தை திறந்து வைத்து நான் உரையாற்றினேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் தான் ஆற்றிய உரையையும் பிரதமர் மோடி இணைத்துள்ளார்.