புதுடில்லி:அன்னியச் செலாவணி சட்ட மீறல் தொடர்பாக, சீனாவின் ‘ஜியோமி மொபைல் போன்’ நிறுவனத்தின் சர்வதேச துணைத் தலைவரிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு, வரி ஏய்ப்பு தொடர்பாக, ஜியோமி உள்ளிட்ட சீன மொபைல் போன் நிறுவனங்களில், வருமான வரித் துறை அதிரடி சோதனை நடத்தியது.இதில், பல நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக, வெளிநாடுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.அவற்றின் அடிப்படையில், அன்னியச் செலாவணி விதி மீறல் குறித்த விசாரணைக்கு வருமாறு, சமீபத்தில் ஜியோமி இந்தியாவின் தலைவர் பதவியில் இருந்து விலகி, சர்வதேச துணைத் தலைவர் பொறுப்பில் உள்ள மனு குமார் ஜெயினுக்கு, அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பியது.
அதன்படி பெங்களூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மனு குமார் ஜெயின் நேற்று ஆஜரானார்.அவரிடம் ஜியோமி நிறுவனம் வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பியது குறித்து அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகிஉள்ளது.
இதற்கிடையே, அன்னியச் செலாவணி சட்ட மீறல் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜியோமி இந்தியா நிறுவனம், சட்ட விதிகளை பின்பற்றி, வர்த்தகம் புரிந்து வருவதாக தெரிவித்துள்ளது.
Advertisement