டிவிட்டர் நிறுவனத்தை இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக இருப்பதாக உலக பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஒவான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஒரு பங்கு 54 டாலர் என்ற விலைக்கு, டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தற்போதைய சந்தை விலையான 45 டாலரை விட சுமார் 20 சதவீதம் அதிகமாகும்.
இது தொடர்பாக டிவிட்டர் நிறுவன தலைவர் பிரெட் டெய்லருக்கு, எலான் மஸ்க் எழுதி இருக்கும் கடிதத்தில், தாம் குறிப்பிட்பிட்டிருக்கும் விலை சிறப்பானது மற்றும் இறுதியானது என்று கூறியுள்ளார்.
இதனை ஏற்காவிடில், டிவிட்டர் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பது என்ற முடிவை தாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை எலான் மஸ்க் வாங்கியிருந்த நிலையில், அதன் நிர்வாக வாரியத்தில் இணைய மறுத்திருந்தார் என்பது குறீப்பிடத்தக்கது.