தங்கம் வென்ற தமிழக கூடைப்பந்து வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: ரூ.42 லட்சம் ஊக்கத் தொகை

சென்னை: தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற கூடைப்பந்து வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.42 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.04.2022) தலைமைச் செயலகத்தில், 71-வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில், தங்கப்பதக்கம் வென்ற தமிழக ஆண்கள் அணிக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் அணிக்கு 12 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 42 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினார்.

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் 3.04.2022 முதல் 10.04.2022 வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 32-மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றதில் 31-அணிகள் தகுதி பெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொண்டன.

10.4.2022 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடியதில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் பிரிவில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில், தமிழ்நாடு பெண்கள் அணி கேரளாவை எதிர்கொண்டு விளையாடியதில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

71-வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேசிய அளவில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை பாராட்டி முதல்வர் உயரிய ஊக்கத்தொகையாக, தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் கூடைப்பந்து அணியை சேர்ந்த 12 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.2.50 லட்சம் வீதம், 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக பெண்கள் கூடைப்பந்து அணியை சேர்ந்த 12 வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாயும், என மொத்தம் 42 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், அணிகளின் வெற்றிக்காக அயராது உழைத்த பயிற்சியாளர்கள் மற்றும் கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.