தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி, தர்மபுரி மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிகடல் பகுதிகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.