சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மற்ற நோய்கள் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் தமிழக பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஹெல்த் மேளா என்ற பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வருமுன் காப்போம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த திட்டத்தின்கீழ் 1250 இடங்களில் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
இதே போன்று மற்ற நோய்களை தடுப்பதற்கான சிறப்பு முகாம்களை தமிழகத்தின் 385 பகுதிகளில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இந்த மருத்துவ முகாம்களில் ரத்த சர்க்கரை பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், கல்லீரல் பரிசோதனைகள், சிறுவர்களுக்கான மருத்துவ சேவைகள், ஊட்டச்சத்து குறைபாடு, பேறுகால சேவைகள், கண் சார்ந்த பிரச்சினைகள், காது, மூக்கு தொண்டை நோய்கள் உள்பட 12 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
இதுதவிர ஹெல்த் மேளா மருத்துவ முகாம்களில் கொரோனா தடுப்பூசியும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்… ரூ.40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை