இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர் ஒருவர், “திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே, இந்தி பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “நேற்று சட்டசபையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில் ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து அவருக்கு பதிலளிக்கையில்,
“முதலில் பெட்ரோல், டீசல் விலை, நமக்கு வரக்கூடிய ஜிஎஸ்டி 7000 கோடி ஆயிரம் கோடி ரூபாயை வாங்கித் தருவதற்கு உண்டான வேலையை பாருங்கள். நம்முடைய தமிழ்நாட்டில் இதுபோன்ற மதம் சார்பாக இருக்கின்ற பிரச்சினையை கொண்டு வந்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள்” என்று விளக்கம் சொல்லிவிட்டார்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
முன்னதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, “மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியதை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டார்கள். அமித்ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்றால், ஹிந்தி மொழி என்பது லிங்க் லாங்குவேஜ், மக்கள் தொகை அடிப்படையில் அதிகப்படியாக மக்களால் பேசக்கூடிய மொழி ஹிந்தி மொழியாக இருக்கிறது. அந்த அர்த்தத்தில்தான் அவர் தெரிவித்திருந்தார்.
இத்தனைக்கும் அமித்ஷா அவர்கள் தாய்மொழியே குஜராத்தி தான். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாய் மொழி குஜராத்தி தான். திமுக மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைய வெளியே வருவது என்ற உடன் அதை திசை திருப்பும் அரசியல் காரணமாக திமுகவினர் மொழிப் பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ளனர்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.