திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வரை 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக பக்தர்கள் ஏராளமானோர் திருப்பதியில் தரிசனத்திற்கு குவிந்தனர். மேலும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுமதிக்கும் வைகுண்ட காம்ப்ளக்சில் 30 அறைகளும் நிரம்பி வழிகிறது. மேலும் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முதல் லக்கேஜ் கவுண்டர் வரை கிலோ மீட்டர் கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்து இருக்கின்றனர்.
இதனால் குழந்தைகள் முதியோர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.