தெருமாடுகள் பிரச்னையை தீர்க்க மாட்டு சாணம் மூலமாக வருமானம் பெற திட்டம்: நிதி ஆயோக் தகவல்

புதுடெல்லி: தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளின் பிரச்னையை தீர்க்க, மாட்டு சாணம் மூலம் வருமானத்தை பெருக்கும் திட்டத்தை நிதி ஆயோக் உருவாக்கி வருகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பெரும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், இது முக்கிய பிரச்னையாக எதிரொலித்தது. இந்நிலையில், இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு, மாட்டுச் சாணத்தை வணிக ரீதியாக பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும் நிதி ஆயோக் புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது. இது தொடர்பாக, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பெரிய கோசாலைகளின் நிலைமைகளை மதிப்பிடுவதற்காக, நிதி ஆயோக் பொருளாதார திட்டக்குழுவின் தலைவர் ரமேஷ்  சந்தின் தலைமையின் கீழ் அதிகாரிகள் குழு சமீபத்தில் சென்றது. இது குறித்து ரமேஷ் சந்த் கூறுகையில், ‘கோசாலை மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். மாட்டு சாணத்தை பல்வேறு துணை தயாரிப்புகளுக்கு பயன்படுத்த முடியுமா என்று பார்க்கிறோம். கோசாலைகளில் அடைக்கப்படும் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் பசுக்கள் குறைந்தளவு பால் கொடுக்கின்றன. ஆனால், அவற்றின் தீவனம், சிகிச்சை செலவு, தொழிலாளிக்கு கூலி போதுமானதாக இல்லை. பயோகாஸ் உருவாக்க மாட்டுச் சாணத்தை பயன்படுத்தலாம். எனவே, அந்த வகையான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறோம்,’ என்று தெரிவித்தார்.* தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2019ம் ஆண்டில் 19.25 கோடி பசு மாடுகளும், 10.99 கோடி எருமைகளும் இருந்தன. மொத்த மாடுகளின் எண்ணிக்கை 30.23 கோடியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.