வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெஷாவர்: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நள்ளிரவில் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்து நீதித்துறை விளக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டு சதி உள்ளதாக கூறி துணை சபாநாயகர் ரத்து செய்தார். இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவில், சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதன்படி ஓட்டெடுப்பு நடந்ததில் இம்ரான் கான் தோல்வியடைந்தார். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக இம்ரான்கான் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. பெஷாவரில் நடந்த பேரணியில் இம்ரான் கான் பேசியதாவது: நள்ளிரவில் நீதிமன்ற அறையை திறந்து விசாரணை நடத்தியது ஏன் என நீதித்துறையை நான் கேட்கிறேன். கடந்த 45 ஆண்டுகளாக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். எப்போதாவது சட்டத்தை மீறியுள்ளேனா? கிரிக்கெட் விளையாடிய போது, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டேன் என எவராவது குற்றம் சாட்டியுள்ளனரா?
முன்பு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும்போது, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடக்கும். தற்போது தான் போராட்டம் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் உதவியுடன், ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதி வாஷிங்டன்னில் நடந்தது. நான் ஆட்சியில் இருந்த போது, யாருக்கும் ஆபத்தானவனாக இருந்தது இல்லை. ஆனால், தற்போது அப்படி இருக்காது.
கடந்த 25 ஆண்டு கால அரசியலில், அரசு அமைப்புகள் அல்லது நீதித்துறைக்கு எதிராக மக்களை திசைதிருப்பியது இல்லை. நள்ளிரவில் நீதிமன்றத்தை திறந்து விசாரணை நடத்த வேண்டிய அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன் என நான் கேட்கிறேன்.
ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராக 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் வழக்கு உள்ளது. அவரை பிரதமராக நாம் ஏற்று கொள்வோமா? இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.
Advertisement