திருமலை: ஆந்திர மாநிலத்தை நாட்டிேலயே முன்னணி சுற்றுலா மையமாக மாற்ற பாடுபடுவேன் என சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நடிகை ரோஜா கூறினார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம், இளைஞர் நலன் துறை அமைச்சராக நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கடந்த 11ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் தனது அறையில் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கண்டிகோட்டா சுற்றுலா மையத்தில் இருந்து பெங்களூருவுக்கும், பெங்களூரு – கண்டிகோட்டா இடையே ஆந்திர மாநில சுற்றுலா பேருந்து சேவையை தொடங்குவதற்கான முதல் கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆந்திர மாநிலத்தை நாட்டிலேயே முன்னணி சுற்றுலா மையமாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. எனவே மாநிலத்தை நாட்டிலேயே முன்னணி சுற்றுலா மையமாக மாற்ற கடுமையாக பாடுபடுவேன். விளையாட்டுத் துறையில், குறிப்பாக கிராமப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்,’’ என்றார். முன்னதாக, அலுவலக வாயிலில் அமைச்சர் ரோஜாவின் கணவரும் திரைப்பட இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி, பூசணிக்காயை கொண்டு திருஷ்டி சுற்றிய பின்னர் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.