புதுடெல்லி: அம்பேத்கரின் 131வது பிறந்தநாளையொட்டி டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நேற்று மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின்னர், டிவிட்டரில் அம்பேத்கருக்கு புகழஞ்சலி பதிவிட்டனர். ஜனாதிபதி கோவிந்த் குறிப்பிடுகையில், ‘பாபா சாகேப் அம்பேத்கர் சமூக நீதியின் வலுவான வக்கீல். அவர் அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியாக நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தார்,’ என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது பதிவில், ‘இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்பு அழிக்க முடியாதது. ஏழை மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டிற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற, இந்நாளில் உறுதியேற்போம்,’ என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிடுகையில், ‘நாட்டின் புனிதமான அரசியலமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு எனது அஞ்சலிகள்.’ என்று தெரிவித்துள்ளார்.