சென்னை: அன்பு, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளை பாடல்கள் மூலம் பரப்புரை செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்று துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். மக்கள் கவிஞர் அறக்கட்டளை சார்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 92-வது பிறந்த நாள் விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார அறிவியல் மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாநில முன்னாள் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆருரன், தமிழ் அறிஞர் வாசுகி கண்ணப்பன், நடனக் கலைஞர் ஷோபனா ரமேஷ், பாடகி பிரபா குருமூர்த்தி ஆகியோருக்கு ‘மக்கள் கவிஞர் விருது’ வழங்கப்பட்டது.
மக்கள் கவிஞர் அறக்கட்டளையின் தலைவர் மெய் ரூசவெல்ட் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமை வகித்து பேசும்போது, “பட்டுக்கோட்டையாருக்கு பொதுவுடைமைப் பார்வை இருந்ததால் அதன் சாயல் அனைத்துப் பாடல்களிலும் இருக்கும்” என்று தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை பாட்டுக் கோட்டையார் என்று கவியரசு கண்ணதாசன் கூறுவார். ஒரே வார்த்தையில் பல்வேறு அர்த்தங்களைப் பொருத்தியிருப்பார். அன்பு, மனிதநேயம் உட்பட வாழ்க்கைக்கான சிறந்த சாராம்சங்களை தொடர்ந்து பாடல்களில் பரப்புரை செய்தவர் என்றார். இந்த விழாவில் மக்கள் கவிஞர் அறக்கட்டளை செயலாளர் ரே.தி.பழனிவேலு, எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.