மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே அரசியல் ரீதியாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
மசூதிகளில் அதிக சத்தத்தை எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை மாநில அரசு அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி இருந்தார். அவற்றை அகற்றாவிட்டால், மசூதிகளுக்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிப்பெருக்கள் மூலம் அனுமான் பாடல்கள் ஒலிபரப்பப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர் மோஹித் கம்போஜ், கோயில்களுக்கு இலவச ஒலிபெருக்கிகளை விநியோகிக்கத் தொடங்கியுள்ளார்.
முன்னதாக அவர் கோயில் அறக்கட்டகளைகுக் எழுதியிருந்த கடிதத்தில், இந்துக்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது என்றும், இந்து மதத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், அனைத்து கோயில்களிலும் ஒலிபெருக்கிகளை விநியோகிக்க முடிவு செய்துள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளபடி, சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில்,
அனுமான் உள்பட கடவுள் பக்தி பாடல்களை கோயில்களில் ஒலிபரப்ப வேண்டும் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் ஒலிபெருக்கி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அமைதி மற்றும் இயல்பு நிலையை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில உள்துறை மந்திரி திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், இயல்பு நிலையை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா அனைத்து மதங்களையும் கொண்ட நாடு, யாரும் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்றும், இந்தியாவின் ஒற்றுமையை உடைக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது, வகுப்புவாத பதற்றம் ஏற்படாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.