நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருபவர் தங்கராசு. நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோயில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடி வருகிறார். கரகாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில் வெள்ளரித் தோட்டத்தில் இரவுக் காவலாளியாக உள்ளார்.
அத்துடன், பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வாழைகாய், இலை, முருங்கைக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். இளங்கோ நகரில் மழைக்கு ஒழுகும் நிலையில் உள்ள ஒரு குடிசை வீட்டில் அவர் குடியிருந்து வந்தார்.
கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாலர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கலைச்சுடர் விருது வழங்கப்பட இருப்பது பற்றித் தெரிவிக்க எழுத்தாளர் நாறும்பூநாதன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரது வீடு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், மின் வசதி கூட இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இது பற்றி நாறும்பூநாதன் தெரிவித்த தகவல் மூலம் விகடன் இணையத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். திரைப்பட நடிகராகவும் நாட்டுப்புறக் கலைஞராவும் உள்ள தங்கராசு இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசிப்பது குறித்து பதிவிட்டோம். இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கவனத்துக்குச் சென்றதும் அவர், நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசுக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தமுஎசக மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாட்டுப்புற கலைஞர் தங்கராசுக்கு வீடு கட்டப்பட்டது. அந்த வீட்டுக்கான சாவியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று தங்கராசு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், வட்டாட்சியர்கள் செல்வன், மாரிராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இது குறித்துப் பேசிய எழுத்தாளர் நாறும்பூநாதன், “40 ஆண்டுகளாக கால்களில் சலங்கை கட்டி, பெண்வேஷமிட்டு ஆடிய மகத்தான கலைஞரான தங்கராசுவை ஒரு தனி நபராக நாங்கள் பார்க்கவில்லை. அவர் இந்த சமூகத்தின் கலைஞன். அவர் குடியிருக்க நல்ல நிலையில் உள்ள ஒரு வீடாவது இருக்க வேண்டும் என்பதற்காகவே முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பாடுபட்டது. அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தங்கராசு, புதிய வீட்டில் குடிபுகுவது பொருத்தமானதாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநரான மாரி செல்வராஜ் கூறுகையில், ”நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவின் கலையைப் பாராட்டி மாவட்ட நிர்வாகமும் நண்பர்களும் சேர்ந்து வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இது ரொம்பவும் சந்தோஷமான நிகழ்ச்சி.
விளிம்பு நிலையில் இருக்கும் ஒரு கலைஞரைக் கைதூக்கி விடும் முயற்சியில் இவ்வளவு பேர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. சினிமா மூலமாக இந்த நிகழ்வு சாத்தியப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. வருங்காலத்திலும் இதுபோன்ற நிறைய நாட்டுப்புறக் கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொணடுவரப் பாடுபடுவேன்” என்றார்.
சொந்த வீடு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய தங்கராசு, ”நான் கடந்த 40 வருடங்களாக ஆயிரக்கணக்கான தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது எதிலும் கிடைக்காத அளவுக்கு ஒரே படத்தின் மூலம் உலகம் முழுவதும் தெரியும் அளவுக்கு ஆகிவிட்டேன். அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர், இயக்குநர் மாரி செல்வராஜ்.
நான் நாட்டுப்புற கலைஞனாக இருந்தபோதிலும் என் வருமானம் எல்லாம் நோய்க்கு வைத்தியம் பார்க்கவும் குடும்பத்தை நடத்தவும் மட்டுமே போதுமானதாக இருந்தது. என் மகளை சிரமப்பட்டு பி.காம் படிக்க வைத்தேன். அதை மீறி வீட்டை சரிப்படுத்த முடியவில்லை. ஆனால் பலரும் இணைந்து எனக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
என் மகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் 10,000 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக வேலை கொடுத்ததோடு எனக்கு நலிந்த கலைஞருக்கான உதவித் தொகையான மாதம் 3000 ரூபாய் கிடைக்கவும் மாவட்ட ஆட்சியர் உதவி செஞ்சிருக்கார். அதோடு என் வீடு பற்றி தகவல் தெரிந்ததும் அதிகாரிகளை அனுப்பி வைத்து குடிசை மாற்று வாரியம் மற்றும் நண்பர்கள் உதவியோடு வீட்டைச் சரிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
தெருக்கூத்துக் கலைஞனாக இருந்த எனக்குக் கிடைத்திருக்கும் இந்த உதவியும் அங்கீகாரமும் பெருமிதப்பட வைக்கிறது. எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்து விட்டது. ஆனால், வெளியே தெரியாமல் ஆயிரக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கும் உதவிகள் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்