இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
அதிபர் மாளிகைக்கு அருகே உள்ள காலி திடலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் முன்னெடுத்து செல்லும் இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூடாரங்கள் அமைத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.
இப்போராட்டத்தில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.
அதிபர் மாளிகை அருகே நடந்த வரும் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது.
இப்போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை அரசு, போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்தது.
போராட்டக்காரர்கள் பேச்சு வார்த்தைக்கு விரும்பினால் அவர்களது பிரதிநிதிகளுடன் பேச்சு நடந்த தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்தார்.
இந்தநிலையில் பேச்சு வார்த்தை நடத்த மகிந்த ராஜபச்சே விடுத்த அழைப்பை போராட்ட குழுவினர் நிராகரித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நாங்கள் இங்கே பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. நீங்களும் (ராஜபக்சே குடும்பத்தினர்) அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்றே இங்கு குவிந்து இருக்கிறோம்.
இங்கே பேச்சுவார்த்தைக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இது தான் எங்களின் பொதுவான நிலைப்பாடு. எந்த பேச்சுவார்த்தைக்கும் முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். ராஜபக்சே குடும்பத்தினருக்கும், அவர்களது அரசாங்கத்துக்கும் இடமில்லை என்றார்.