மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
சித்திரை திருவிழாவில் பங்கேற்க மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளும் மதுரை சித்திரை திருவிழாகளை இழந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா தொடங்கியதிலிருந்து காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் நடந்த சுவாமி வீதி உலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்தரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண விழா தொடங்கி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது சுந்தரேசுவரருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் இன்று காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.
கோவிலில் உள்ள வடக்குமேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அப்போது அம்மன் சிவப்பு நிறத்தில் பட்டாடை உடுத்தி இருந்தார்.
ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் செலவில் 10 டன் வண்ணவண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமண மேடையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் தயாராக இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் ஆடி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார். இதையடுத்து 10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ரூ.500 கட்டணச் சீட்டில் 2,500 பேர், ரூ.200 கட்டண சீட்டில் 3,500 பேர் என 6 ஆயிரம் பேர் கட்டண அடிப்படையிலும், 6ஆயிரம் பக்தர்கள் இலவச அனுமதி அடிப்படையிலும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.
மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் 3000 பேர் என மொத்தம் 15 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் திரண்டனர். அவர்கள் காலை 7 மணிமுதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இலவச அனுமதி பெற்றவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் கட்டண சீட்டு வாங்கியவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று கோவிலுக்குள் சென்றனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கோவில் வளாகம் மற்றும் மாசி வீதிகளில் 20 இடங்களில் பிரமாண்ட கணினி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலமாகவும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கோவில் வளாகம் மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை சித்திரை திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6:30 மணி தேரோட்டம் நடைபெறுகிறது.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக அழகர் மலையிலிருந்து அழகர் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் தேரோட்டம் மற்றும் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.