Opposition parties boycott TN Governor’s tea party: தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த விருந்தில் பங்கேற்க போவதில்லை என சிபிஎம், விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் சிபிஐ(எம்) பங்கேற்காது! தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுநர் அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதிலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவு செய்துள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: குமரி: வகுப்பறையில் மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியர் சஸ்பெண்ட்
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்கள் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்?
சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் ஆளுநர் அவர்கள், சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்?
எனவே, ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை விசிக புறக்கணிக்கிறது. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகிறோம்”, என தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் அங்கு சென்று தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாக பேசி வருகிறார். மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட்டிற்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஆளுநரிடம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மசோதாவின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கிறார். இதுபோன்று தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும் என முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.