வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-போதிய பயிற்சி பெறாத காரணத்தால், ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தைச் சேர்ந்த 90 விமானிகளுக்கு, ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம், ‘மேக்ஸ்’ விமானங்களை தயாரிக்கிறது. கடந்த 2019ல் அடிஸ் அபாபா அருகே, ‘எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் மேக்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 157 பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து மேக்ஸ் விமானங்களை இயக்க, இந்திய விமான கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது.
கடந்த ஆண்டு மேக்ஸ் விமானங்களின் ‘சாப்ட்வேர்’ குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதாக போயிங் நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, மேக்ஸ் விமானம் மீதான தடை நீக்கப்பட்டது.இந்நிலையில், இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மட்டுமே மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது. இதையடுத்து இந்நிறுவன விமானிகளின் பயிற்சி விபரங்களை, இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆராய்ந்தது.
அதில், 90 பேருக்கு மேக்ஸ் விமானத்தை இயக்க போதிய பயிற்சி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர்கள் அந்த விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டுஉள்ளது. எனினும் அவர்கள் பிற விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement