ரஷ்யா – உக்ரைன் போரில் இருந்து…பாடம் படியுங்கள்:ராணுவத்துக்கு நிபுணர்கள் அறிவுரை

புதுடில்லி:’உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை ஆய்வு செய்து, அதில் இருந்து ராணுவத்தினர் கற்கும் பாடங்களையும், போர் தந்திர உத்திகளில் செய்ய வேண்டிய மாற்றங்களையும், நம் ராணுவ தலைமையகங்கள் செயல்படுத்த வேண்டும்’ என, தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்., 24ல் போர் தொடுத்தது. கடந்த ஆறு வாரங்களாக நடந்து வரும் போர் முடிவுக்கு வராமல், ஏழாவது வாரத்தை எட்டியுள்ளது. ரஷ்ய படைகளுக்கு சற்றும் சளைக்காமல் உக்ரைன் ராணுவம் பதிலடி தந்து வருகிறது. இதை ரஷ்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘இந்த போரில் இருந்து நம் ராணுவத்தினர் பல்வேறு பாடங்களை கற்க வேண்டும்’ என, போர் பயிற்சி மற்றும் தேசிய பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது பற்றி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினருமான லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா கூறியதாவது:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் திட்டத்தில் இருந்து விலகாமல் போர் நடந்து வருகிறது. ஆனால், ரஷ்ய ராணுவத்தினரின் மன உறுதி மற்றும் அவர்கள் முன்னேறிசெல்லும் உத்திகளில் கேள்வி எழுகிறது. ரஷ்ய ராணுவம் பல மூத்த தளபதிகளை போரில் இழந்து வருகிறது. படையை வழிநடத்தி செல்லும் தலைமை மற்றும் கட்டுப்பாட்டில் பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. ஆனாலும், புடினின் ராணுவ நோக்கங்களை படையினர் பூர்த்தி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் கூறியதாவது:ரஷ்யா நடத்தும் தாக்குதல்களில் பல்வேறு சிக்கல்களை காண முடிகிறது. ராணுவத்தின் திறன் மற்றும் அர்ப்பணிப்பில் பல கேள்விகள் எழுகின்றன. அவர்கள் பின்பற்றும் போர் தந்திரங்களில் பிரச்னைகள் உள்ளன. எதிரியிடம் பல்வேறு நவீன ஆயுதங்கள் இருக்கும் நிலையில், போதிய பாதுகாப்பு உத்திகள் இன்றி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்துவதை காண முடிகிறது.

கீவ் நகரில் ரஷ்ய ராணுவத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அங்கு நடந்த தாக்குதலில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ரஷ்ய படையின் ஏவுகணை தாக்குதலில், பலர் வீடுகளை இழந்தனர். இந்த போரால் ஏற்பட்ட செலவு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை, ரஷ்யாவுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய படையினர் 476 பீரங்கிகளை இழந்து உள்ளனர்.
இந்த போரில் இருந்து நம் இந்திய ராணுவம் கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன. பல நவீன ஆயுதங்கள் பயன்பாட்டில் உள்ள இக்காலத்தில், போர் தந்திர உத்திகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பீரங்கிகள், ராக்கெட்கள், வெடி பொருட்கள், ஆயுதங்களையே நம் ராணுவம் பெரிதும் நம்பி உள்ளது.

நம் விமானப் படையின் முதுகெலும்பாக கருதப்படும், ‘சுகோய் 30’ ரக போர் விமானங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டன.உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததை போல சீனா அல்லது பாகிஸ்தான் நம்மிடையே வாலாட்டினால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உடனடியாக நம் உதவிக்கு வரும் என்றாலும், நம் போர் உத்திகளில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இரண்டாம் உலகப் போர் காலத்திய போர் முறைகளை பின்பற்றினால் சண்டை முடிவுக்கு வராமல் நீளுவதுடன், அப்பாவிகள் கொல்லப்படுவது தான் மிச்சம் என்பதை ரஷ்ய – உக்ரைன் போர் உணர்த்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

‘ராணுவ முதலீடுகளைசெலவாக பார்க்காதீர்கள்!’

நம் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே கூறியதாவது:ராணுவத்துக்காக செய்யப்படும் செலவுகளை முதலீடாக பார்க்க வேண்டும். அதை வீண் செலவாக கருதக்கூடாது. அந்த முதலீட்டில் முழுமையான பலன் கிடைக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் போர் நடந்தால் அல்லது ஒரு பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவானால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதை பார்த்திருப்பீர்கள். ராணுவம் உறுதியாக இருந்தால் மட்டுமே, இது போன்ற நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.