மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுனர் காரை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றதால் அந்த பாதையில் சுங்க வரி வசூல் பாதிக்கப்பட்டது.
ராமநாதபுர மாவட்ட பதிவெண் கொண்ட கார், திருப்பாச்சேத்தி சுங்க சாவடியை கடக்க முயன்ற போது காரின் பாஸ்டேக்கில் போதிய பணம் இருப்பு இல்லாததால் கேட் திறக்கவில்லை.
இதனையடுத்து ஆன்லைன் மூலம் அவர் ரீசார்ஜ் செய்த போதும் கேட் திறக்கவில்லை என கூறப்படுகிறது. பத்துநிமிடம் கழித்துதான் பணம் கணக்கில் ஏறும், அதுவரை காத்திருங்கள் என பணியில் இருந்த சுங்க சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் சுங்க சாவடி 11வது லைன் பாதையில் காரை நிறுத்தி விட்டு பஸ் ஏறி சென்று விட்டார். இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.