ராம்ராஜ் காட்டனுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘அன்பாசிரியர்-2021’ விருதுக்கான இறுதிக்கட்ட தேர்வு நிறைவு

மாணவர்கள் மற்றும் சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் அதிசிறப்பாக ஆற்றிவரும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘அன்பாசிரியர் – 2021’விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்குகிறது. லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட்ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து இந்த விருதை வழங்க உள்ளன. உடன் கொண்டாடுகிறது சங்கர் ஐஏஎஸ் அகாடமி.

விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியான பிறகு தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு மண்டலம் வாரியாக சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அலுவலகத்தில் முதல்கட்ட நேர்முகத்தேர்வு சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.

அதில் தேர்வானவர்களுக்கு இறுதிச் சுற்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. நேர்காணலின்போது, பாலின சமத்துவம், சமூகநீதி, பள்ளி மேம்பாட்டில் பங்கு, நூல் வாசிப்புஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து 10 கேள்விகள் ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் தேர்வுக் குழுவால் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் வாரியாக அன்பாசிரியர்கள் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை மண்டலத்துக்கான இறுதிக்கட்ட நேர்முகத்தேர்வு சென்னை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அலுவலகத்தில் ஏப்.3-ம் தேதி நடைபெற்றது. இதில், 24 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த நேர்காணலுக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் மாதவன், தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் மாநில ஆணையர் இளங்கோவன், மூத்த பேராசிரியர் சிவக்குமார், சிறார் எழுத்தாளர் பிரியசகி ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பு வகித்தனர்.

நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் கே.ஆதிமந்தி, சி.சரவணன் ஆகியோர் கூறும்போது, ‘‘நாங்கள் இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளை அடுத்தகட்டத்துக்கு எவ்வாறு நகர்த்திச் செல்வது, சமூகரீதியாகப் பள்ளிகளைத் தொடர்புபடுத்திக் கொள்வது குறித்த புரிதல் இதன்மூலம் கிடைத்தது. மேலும், நேர்காணலில் பங்கேற்ற பிற ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், கற்றல் வழிமுறைகளை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே மாநில நல்லாசிரியர் விருதுவாங்கியவர்களுக்குக்கூட, அன்பாசிரியர் விருது கூடுதல் மதிப்பு வழங்கக் கூடியதாகவே கருதுகிறோம்” என்றனர்.

திருச்சியில் முதல்கட்ட நேர்முகத் தேர்வின்மூலம் தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு இறுதிக்கட்ட நேர்முகத்தேர்வு திருச்சி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அலுவலகத்தில் ஏப்.3-ம் தேதி நடைபெற்றது. இறுதிக்கட்ட நேர்காணலுக்கு நடுவர்களாகப் பேராசிரியர் அமுதா, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர்கள் இரா.எட்வின், க.துளசிதாசன் ஆகியோர் செயல்பட்டனர். நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் தங்களின் கல்வி மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட மாணவர் நலனுக்கான செயல்பாடுகளை பவர் பாயின்ட் மூலம் நடுவர்களிடம் காண்பித்து, நடுவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

நேர்காணலில் நடுவராகச் செயல்பட்ட சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் க.துளசிதாசன்கூறும்போது, ‘‘கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு என்பதுமிகவும் அவசியம். இந்த விருது மூலம், ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் அந்தப் பணியைச் செய்து வருகிறது” என்றார்.

கோவை மண்டலத்தைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலிருந்து முதல்கட்டத்தில் தேர்வான 16 பேருக்கான இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு கோவையில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் ஏப்.10-ம் தேதி நடைபெற்றது. நடுவர்களாககோவை அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் வெ.கலைச்செல்வி, ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் கி.நாச்சிமுத்து,பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் தலைமை இயக்குநர் ஆர்.நந்தகோபால், கோவை அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர் பி.சூரியநாராயணன் ஆகியோர் பொறுப்பு வகித்து விருதுக்கு தகுதி படைத்த ஆசிரியர்களைத் தேர்வு செய்தனர்.

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இ.கலைக்கோவன் கூறும்போது, “விருது பெறும் ஆசிரியர்கள், இந்த அங்கீகாரத்தைத் தக்கவைக்க முனைப்பு காட்டுவார்கள்” என்றார்.

திருப்பூர், குமார் நகர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியை என்.கல்பனா கூறும்போது, “இந்து தமிழ் நாளிதழ் முன்னெடுத்த நல்ல விஷயங்களில் ‘அன்பாசிரியர் விருது’ம் ஒன்று. விருதுக்கான தேர்வின்போது திறமையான பல ஆசிரியர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும், அவர்களின் தொடர்பும் கிடைத்தது” என்றார்.

மதுரை மண்டலத்திலிருந்து மாவட்டத்துக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 10 மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆசிரியர்கள் முதல்கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்.10-ம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். மதுரை சரஸ்வதி நாராயணா பொறியியல் கல்லூரி முன்னாள் பேராசிரியர் விஜயகுமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சீனிவாசன், மதுரைகல்லூரி முன்னாள் பேராசிரியர் ரா.முரளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மாதவன் ஆகியோர் ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய ஜோசப்ராஜ் கூறும்போது, “ஆசிரியர்களைப் பற்றி தவறான கருத்துகள் வெளிவரும் சூழலில், ஆசிரியர்களின் கவுரவம் காக்க ‘அன்பாசிரியர்கள் விருது’ வழங்குவது பெருமைக்குரியது. இது ஆசிரியர்களின் செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும். இதன்மூலம் ஒவ்வொரு ஆசிரியர்களின் திறமைகள், அனுபவங்கள் கண்டறியப்படுகிறது. உண்மையான உழைப்பு திறமைக்குக் கிடைக்கும் பரிசு, அன்பாசிரியர் விருது” என்றார்.

இறுதிக்கட்ட நேர்காணல் முடிந்துள்ள நிலையில், விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் ’அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழா தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின், நிகழ்விட பார்ட்னராக இந்தோ – ரஷ்யன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸும், டி.வி. பார்ட்னராக நியூஸ் 7 தொலைக்காட்சியும் இணைந்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.